கெப்பலா பாட்டாஸ்: மலேசியச் சந்தையில் உள்நாட்டு அரிசிக்கு நிலவும் தட்டுப்பாடு ஒரு மாதத்திற்குள் சீராகும் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தலையிட்டு, மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளாலும் தொடர் கண்காணிப்பாலும் உள்நாட்டு அரிசித் தட்டுப்பாடு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
விவசாயிகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய நாட்டின் அரிசி தொழில்துறையைச் சேர்ந்தவர்களுடன் அமைச்சு நடத்திய கலந்துரையாடலில் உள்நாட்டு வெள்ளை அரிசி சிறப்புத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அனைவரும் ஒப்புக்கொண்டனர் என வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு தெரிவித்தார்.
“இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த ஓராண்டுக்கு, விவசாயிகள் உள்நாட்டுச் சந்தைக்குத் தேவைப்படும் உள்ளூர் வெள்ளை அரிசியின் உற்பத்தியை 20 விழுக்காடு அதிகரிப்பர்.
“எப்போதெல்லாம் உள்ளூர்ச் சந்தையில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறதோ அப்போதெல்லாம் மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையமும் எல்பிபி எனப்படும் விவசாயிகள் அமைப்புகளின் ஆணையமும் இணைந்து அந்த விவகாரத்தில் தலையிட்டு அதைச் சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்,” என்றார் அவர். புதன்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னர், கோழி இறைச்சிக்கும் முட்டை விநியோகத்திற்கும் தட்டுப்பாடு நிலவியபோது இந்த முறையைப் பயன்படுத்தி அதைச் சரிசெய்ததாக அவர் சொன்னார்.
புதன்கிழமை, பொக்கோக் செனா விவசாயிகள் சங்கத்தின் விற்பனை நிலையத்தை அமைச்சர் சாபு திறந்து வைத்தார்.
குறிப்பாக, பல்பொருள் அங்காடிகள் இல்லாத பகுதிகளில் குறிப்பிட்ட சில குழுக்களுக்கு உள்நாட்டு வெள்ளை அரிசி விநியோகிக்கும் நோக்கில் இந்த நிலையம் திறக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையத்தின்மூலம் 2,000 அரிசிப் பொட்டலங்களை விற்பனை செய்ய முடியும் என்றும் 10 கிலோ அரிசிப் பொட்டலம் 26 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.