கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்யும் முயற்சியில், இவ்வாண்டின் இறுதிக்குள் ‘மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்’ நிறுவனம் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவர இருக்கிறது.
ஒழுகும் கூரைகள், பயணப் பெட்டிகளைக் கையாளும் முறை உள்ளிட்ட பிரச்சினைகளை அந்த விமான நிலையம் எதிர்நோக்குகிறது.
நிதியையும் நிபுணத்துவத்தையும் சிலர் வரவேற்றுள்ளபோதும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் அந்த வட்டாரத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களின் தரத்தை எட்டிப்பிடிக்க இந்தத் திட்டங்கள் போதுமானவையா என்பது குறித்து வேறு சிலர் ஐயம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டு இறுதிக்குள் 12.3 பில்லியன் ரிங்கிட் (S$3.5 பில்லியன்) மதிப்பிலான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவிருக்கிறது.
அதன்படி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஸ்’ம், அபு தாபி முதலீட்டு ஆணையமும் ‘மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்’ நிறுவனத்தில் கூட்டாக 30 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்டிருக்கும்.