போர் நீடித்தால் உலகப் பொருளியல் சீர்குலையும்: ஈரான் எச்சரிக்கை

போர் நீடித்தால் உலகப் பொருளியல் சீர்குலையும்: ஈரான் எச்சரிக்கை

2 mins read
உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தே பல நாடுகளை அடைகிறது.
95c9046f-9f90-41bb-9d70-8103a31aa466
புதன்கிழமை (மார்ச் 11) அரச தாய்லாந்து கடற்படை வெளியிட்ட படத்தில் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் தாக்கப்பட்ட அந்நாட்டு சரக்குக் கப்பலிலிருந்து (மயூரி நாரி) புகை கிளம்பும் காட்சி. - படம்: ஏஎஃப்பி
Watch on YouTube

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் தற்போது நடந்துவரும் போர் நீண்டகாலம் தொடர்ந்தால், உலகப் பொருளியல் சீர்குலைந்துவிடும் என்று ஈரான் புதன்கிழமை (மார்ச் 11) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல்களைத் தாக்கி வருவதால் எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. போர் தொடங்கியது முதல் எண்ணெய் விலையும் ஏற்றம் கண்டுவருகிறது.

இஸ்ரேல் உட்பட, அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள ஏறத்தாழ ஒன்பது மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கி ஈரான் போரை விரிவடையச் செய்துள்ளது.

அவற்றில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஈராக், ஜோர்தான், ஓமான் ஆகிய நாடுகள் அடங்கும். ஹிஸ்புல்லா போராளிகளைக் குறிவைத்து இஸ்ரேல் பெய்ரூட்டைத் தாக்கிவருகிறது.

மத்திய கிழக்குப் போரில் பலர் மாண்டனர். படுகாயமடைந்தோர், இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும் உயர்ந்துவருவதால் வட்டாரம் பதற்றமடைந்துள்ளது.

போரால் பொருளியல் பாதிக்கப்படக்கூடும் என்ற அரசியல் நெருக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆளாகியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உறுதியளித்தார். உலக வர்த்தகத்தின் மிக முக்கியக் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்புக்கும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தே பல நாடுகளை அடைகிறது. ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் கொண்டு ஈரான் அங்கு செல்லும் கப்பல்களைத் தாக்கிவருவதால், அந்தப் பாதை போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

அனைத்துலக எரிசக்தி அமைப்பில் (IEA) உள்ள உறுப்பு நாடுகள், எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அவற்றிடம் உள்ள கையிருப்பைப் பயன்படுத்த இணங்கியுள்ளன. அமைப்பு, வரலாறு காணாத வகையில் 400 மில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய் விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்