வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கநிலை, புதன்கிழமை (நவம்பர் 5) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக நீண்ட ஒன்றாக ஆனது. அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முதல் தவணைக் காலத்தின்போது ஏற்பட்ட 35 நாள் அரசாங்க முடக்கநிலையையும் இது விஞ்சிவிட்டது.
அமெரிக்க நாடாளுமன்றம் செப்டம்பர் 30க்குப் பிறகு நிதிக்கு ஒப்புதல் அளிக்கத் தவறியதால், மத்திய அரசாங்க அமைப்புகள் படிப்படியாக முடங்கி வருகின்றன. இதனால், மில்லியன்கணக்கான அமெரிக்கர்களுக்கு உதவும் நலத்திட்டங்கள் தடைபட்டு இருப்பதால் மக்களுக்கு சிரமம் அதிகரித்து வருகிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் என 60,000க்கும் அதிகமானோர் சம்பளமின்றி வேலை செய்கின்றனர். அதிகமானோர் வேலைக்குத் திரும்பாவிட்டால் விமான நிலையங்களில் குழப்பமான சூழல் நிலவக்கூடும் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
விமான நிலைய ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்வதைவிட நோய்வாய்ப்பட்டதாகக் கூறி விடுப்பு எடுத்தது, 2019ல் குறிப்பிடத்தக்க தாமதங்களுக்கு வழிவகுத்தது. திரு டிரம்ப் அப்போது முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டுவர இது ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

