கோலாலம்பூர்: லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்புடைய சாலை விபத்துகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்தது 1,457 பேரின் உயிரைப் பறித்ததாகப் புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஆக அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஒவ்வொரு 36 மணி நேரத்திற்கு ஓர் உயிர் போவதாகவும் மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆய்வகம் தயாரித்த அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அதிவேகத்தில் செல்வது, அளவுக்கு அதிகமான பாரத்தைச் சுமப்பது ஆகியவை லாரி விபத்துகளுக்கு வித்திடுகின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளில் உயிரிழந்த 1,457 பேர் 3,500 லாரி விபத்துகளுடன் தொடர்புடையவர்கள் என்று சாலைப் பாதுகாப்பு ஆர்வலர் முகம்மது ஹிஷாம் ஷாஃபி தெரிவித்தார்.
அத்துடன், இத்தகைய கனரக வாகன விபத்துகளால் 473 படுகாயச் சம்பவங்களும் 1,076 பேர் இலேசாகக் காயமடையும் சம்பவங்களும் நேர்வதாக அவர் குறிப்பிட்டார்.
அதிக நேரம் பணியாற்றுவதால் ஓட்டுநருக்குக் களைப்பு ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமான பாரம், லாரியின் நிலைத்தன்மையைப் பாதிக்கிறது. பல லாரிகளும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று திரு ஹிஷாம் கூறினார்.
மலேசியாவின் போக்குவரத்து பாதுகாப்புத் தரநிலைகளுடன் பொதுப் போக்குவரத்து மற்றும் வர்த்தகப் போக்குவரத்து நடத்துநர்களில் 32 விழுக்காட்டினர் மட்டும் ஒத்துப்போவதாகவும் அவர் கூறினார்.

