கோத்தா திங்கி: ஜாலான் சுங்கை ரெங்கிட் – கோத்தா திங்கி சாலையின் 65வது கிலோமீட்டரில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 24 வயது தாயும் அவரது மூன்று மாத ஆண் குழந்தையும் உயிரிழந்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கைக்குழந்தை கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7.00 மணியளவில் இவ்விபத்து நடந்தது.
உயிரிழந்த பெண் தனது ‘பெரோடுவா பெஸா’ காரில் குழந்தை உட்பட ஐந்து பயணிகளுடன் சுங்கை ரெங்கிட்டில் இருந்து கோத்தா திங்கி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைக்குச் சென்று, அங்கு வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதாக நம்பப்படுகிறது என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசுஃப் ஓத்மான் தெரிவித்தார்.
காரில் இருந்த மற்ற நான்கு பயணிகளும் 60 வயதான லாரி ஓட்டுநரும் காயமடைந்து, கோத்தா திங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடல் கூராய்வுப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

