கேலாங் பாத்தா (ஜோகூர்): சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்கு காய்கறிகளைச் சுமந்து சென்ற லாரி ஒன்று அங்கிருந்த அதிகாரிகளால் மீண்டும் சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
அந்த லாரியில் 2,160 கிலோ நீளமான முட்டைக்கோஸ்கள் இருந்ததாகவும் அவற்றைச் சோதனையிட்டபோது முட்டைக்கோஸ்களில் உயிருடன் பூச்சிகள் காணப்பட்டதாகவும் மலேசிய நோய்த்தடுப்பு மற்றும் சோதனைச் சேவைப் பிரிவின் ஜோகூர் இயக்குநர் எடி புத்ரா முகம்மது யூசேஃப் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து இரண்டாவது கடற்பாலம் வழியாக ஜோகூரின் சுல்தான் அபு பக்கர் சோதனைச் சாவடிக்கு அந்த லாரி வந்தது.
லாரியில் 216 பெட்டிகளில் இருந்த முட்டைக்கோஸ்களில் சோதனை செய்யப்பட்டவற்றி ‘பைலோட்ரேட்டா’ என்னும் பூச்சிகள் உயிருடன் காணப்பட்டதாகவும் திரு எடி தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
திருப்பி அனுப்பப்பட்ட முட்டைக்கோஸ்களின் மதிப்பு 6,800 ரிங்கிட் (S$2,030) என்றும் அவர் கூறினார்.
மலேசிய நோய்த்தடுப்பு சோதனைச் சட்டம் 2011ன் கீழ், பூச்சிகள், நோய்கள் மற்றும் இதரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வேளாண் பொருள்களை இறக்குமதி செய்வது குற்றம் என்றார் அவர்.
சட்டத்தை மீறுவோருக்கு 100,000 ரிங்கிட் வரையிலான அபராதம், ஆறாண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் திரு எடி தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பைக் கட்டிக்காக்க மலேசியாவின் நுழைவாயிலில் கண்காணிப்பு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.