பின்னோக்கிச் சென்ற லாரி; சக்கரத்தில் சிக்கி மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

1 mins read
cf3ef42d-a611-4b31-a949-69b07cbcdae4
திடீரெனப் பின்னோக்கிச் சென்ற லாரி, முக்கியச் சாலைக்குள் சென்று மோட்டார்சைக்கிளோட்டி மீது மோதியது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவரது மரணத்திற்குக் காரணமாக இருந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்சார் சவுத்தில் உள்ள ஜாலான் கெரிஞ்சியில் நவம்பர் 23ஆம் தேதி காலை நடந்த இந்த விபத்தில் மேலுமொரு மோட்டார்சைக்கிளோட்டி காயமுற்றதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கட்டுமானத் தளம் ஒன்றில் அதன் பிரேக் (brake) திரவத்தை நிரப்புவதற்காக நின்றுகொண்டிருந்த லாரி, திடீரெனப் பின்னோக்கிச் சென்றது. அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு முக்கியச் சாலைக்குள் புகுந்த லாரி மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மீது மோதியது.

மோட்டார்சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த அதன் 32 வயது ஓட்டுநர், தன்னை நோக்கி வந்த லாரியைத் தவிர்க்கப்போய் அதன் வலப்புறப் பின்சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது.

அதே சாலையில் சென்றுகொண்டிருந்த இன்னொரு மோட்டார்சைக்கிளோட்டி மீதும் லாரி மோதியதில் அவரது நெற்றிப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன.

லாரியை ஓட்டிய 32 வயது ஆடவர் கோலாலம்பூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் பிற்பகலில் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டது.

லாரி பின்னோக்கிச் சென்று மோட்டார்சைக்கிளோட்டியை விழ வைத்ததைக் காட்டும் காணொளிப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்