லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் ‘ஈஸ்ட் ஹாலிவுட்’ வட்டாரத்தில் சனிக்கிழமை (ஜூலை 19), கூட்டத்திற்குள் ஒருவர் வாகனத்தைச் செலுத்தியதில் ஏறத்தாழ 30 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பலர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை கூறியது.
சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணியளவில் சான்டா மோனிகா புலவார்டில் நடந்த இச்சம்பவத்தில் நால்வர் கடுமையாகக் காயமடைந்ததாகவும் எட்டுப் பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ உதவி வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் சிறப்பு மீட்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறின.
வாகனவோட்டியின் அடையாளத்தையோ சம்பவம் குறித்த மேல்விவரங்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை.
இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தீயணைப்புத் துறையை மேற்கோள்காட்டி ‘சிஎன்என்’ தகவல் வெளியிட்டுள்ளது.