தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ள ஹோட்டல் ஊழியர்கள்

2 mins read
7a7b537f-766e-4a0d-adbf-04f6cf72bbec
கோடைக்கால சுற்றுப்பயணங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

லாஸ் ஏஞ்சலிஸ்: தென் கலிஃபோர்னியாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிக சம்பளத்தையும் மேம்பட்ட அனுகூலங்களையும் கோரி ஞாயிற்றுக்கிழமையன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை நான்காம் தேதி விடுமுறையை முன்னிட்டு, பல சுற்றுப்பயணிகள் அந்த வட்டாரத்தைச் சென்றடைந்திருக்கும் வேளையில், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

கிருமிப்பரவல் காலகட்டத்தில் நடந்தவற்றையும் லாஸ் ஏஞ்சலிஸில் தங்கி தங்கள் வாடகை கட்டணத்தைச் செலுத்த முடியாததாலும் ஊழியர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளதாக ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் கர்ட் பீட்டர்சன் கூறினார்.

இதற்கிடையே தொழிற்சங்கம் ஆக்கபூர்வமான சமரசப் பேச்சில் ஈடுபடவில்லை என்றும் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதில் தலைவர்கள் உறுதியாய் இருப்பதாகவும் ஹோட்டல் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஹோட்டல்கள் தொடர்ந்து அதிக சம்பளம், கட்டுப்படியான தரமான குடும்பச் சுகாதாரப் பராமரிப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்புவதாக 40க்கும் மேற்பட்ட லாஸ் ஏஞ்சலிஸ், ஆரஞ்சு கவுண்டி ஹோட்டல்கள் அடங்கிய ஒருங்கிணைந்த சமரசக் குழுப் பேச்சாளர் கீத் குரோஸ்மான் கூறினார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அண்மையில் அங்கு தொடர்ச்சியாக நடந்த தொழிலாளர் நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான வாழ்க்கைச் செலவினத்தால் இல்லப் பணியாளர்கள் முதல் ஹோலிவுட் எழுத்தாளர்கள் வரை பல ஊழியர்கள் நிதிப் பிரச்சினைகளின்றி இருப்பதற்குச் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டம் பல நாள்களுக்குத் தொடரும் என்று திரு பீட்டர்சன் ஞாயிற்றுக்கிழமையன்று கூறினார். ஆனாலும் ஹோட்டல்கள் தொடர்ந்து வருகையாளர்களுக்குச் சேவை வழங்கும் என்று லாஸ் ஏஞ்சலிஸின் ஹோட்டல் சங்கம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்அமெரிக்கா