லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்கப் போர்ப் படை வீரர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை (ஜூன் 14) போராடினர்.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் மத்திய வட்டாரத்தில் உள்ள அரசாங்கக் கட்டடத்திற்கு முன் நூற்றுக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி அதிகாரிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அந்த அரசாங்கக் கட்டடத்திற்கு வெளியே கிட்டத்தட்ட 50 போர்ப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்யக்கூடாது என்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒரு வாரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
சில இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், போர்ப் படை வீரர்களையும் தேசியக் காவற்படை வீரர்களையும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பணியமர்த்தினார்.
இது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மேலும் சினம் மூட்டியது. இதையடுத்து தற்போது போர் படை வீரர்கள் நகரைவிட்டு வெளியேற வேண்டும் என்று லாஸ் ஏஞ்சலிஸ் மக்கள் களமிறங்கியுள்ளனர்.
“ நாங்கள் எதிரிகள் அல்ல, சாதரண மக்கள். போர்ப் படை வீரர்கள் தங்களது கடமையைச் செய்யவில்லை,” என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசாமும் போர்ப் படை வீரர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிவருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“99 விழுக்காடு ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடக்கிறது. சில நேரம் மட்டும் அது வன்முறையாக மாறுகிறது,” என்று அவர் கூறினார்.