கைவிரலை இழந்தபோதும் பணியை முடிப்பதில் ஊழியர் தீவிரம்

கைவிரலை இழந்தபோதும் பணியை முடிப்பதில் ஊழியர் தீவிரம்

1 mins read
28f1af38-8d04-4154-8f4f-eec6a7a04517
தமது கைவிரலின் நுனிப் பகுதியை இழந்தபோதிலும், மருத்துவ உதவி நாடாமல் தமது வேலையை அந்த ஆடவர் தொடர்ந்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

பொருள் விநியோக ஊழியர் ஒருவர் வேலை நேரத்தின்போது நிகழ்ந்த விபத்தில், தமது கைவிரலின் நுனிப் பகுதியை இழந்தார். ஆனாலும், மருத்துவ உதவி நாடாமல் தமது வேலையை அவர் தொடர்ந்தார்.

துண்டிக்கப்பட்ட அவரது கைவிரலின் நுனிப் பகுதி, ஜப்பானின் குயோட்டோ நகர் வீதியில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) தெரிவித்தனர்.

அறுபதுகளில் உள்ள அந்த ஆடவர், தமது கார் கதவை மூடியபோது தமது கைவிரல் மாட்டிக்கொண்டதாக அதிகாரிகளிடம் கூறினார்.

திங்கட்கிழமை மாலை 4.15 மணியளவில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தொடக்கப்பள்ளி மாணவர் ஒருவர், அந்த ஆடவரின் கைவிரல் நுனிப் பகுதியைக் கண்டார். அதையடுத்து அந்த மாணவரின் தாயார் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.

துண்டிக்கப்பட்ட கைவிரலின் நுனிப் பகுதியின் நீளம், 2 செ.மீ.க்கும் சற்று குறைவாக இருக்கும் என்றும் கைவிரல் அதில் இணைக்கப்பட்டிருந்ததாக ஜப்பானிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.

"அந்த ஊழியர் வேலைக்கு அதிக முன்னுரிமை அளித்திருப்பார். பொருளை உரிய இடத்திற்கு விரைந்து கொண்டுசேர்த்து வேலையை முடிக்க வேண்டும் என்பதிலேயே அவரது முழுக்கவனமும் இருந்திருக்கலாம்," என்று உளவியல் நிபுணர் டாக்டர் யாசுஷி ஃபுஜி ஜப்பானியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.