தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாவாவில் காதுகளைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை

2 mins read
53264272-e43e-4a99-8ed8-a4f4e7c0398e
கிழக்கு ஜாவா தெரு விருந்துகளில் நகரையே அதிர வைக்கும் ஒலிபெருக்கிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

மலாங்: இந்தோனீசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் காதுகளைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள் சன்னல்களை உடைக்கும் அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

தெரு விருந்துகளில் பல அடுக்குகளைக் கொண்ட இத்தகைய ஒலிபெருக்கிகள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.

மின்னணு இசை மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற இசையின் கலவையை அவை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்கின்றன.

இது, உள்ளூர் அதிகாரிகளுக்கும் மற்றும் அமைதியை விரும்பும் அண்டை வீட்டார்களுக்கும் கடுங்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரிகள் அவற்றின் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

அதே நேரத்தில் சமய அமைப்புகளும் அவற்றிலிருந்து எழுப்பப்படும் அதிகப்படியான மற்றும் சேதப்படுத்தும் ஒலியை “ஹராம்” அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

“மதியம் ஒரு மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை இசை மிகச் சத்தமாக ஒலிக்கும். அவர்கள் இசையை போட்டு மதுவும் அருந்துகிறார்கள்,” என்று கிழக்கு ஜாவா மாகாணத்தின் ஙன்ட்ரு கிராமத்தில் வசிக்கும் திரு. அஹ்மத் சுலியாத் ஏஎஃப்பியிடம் கூறினார்.

“இது மிகவும் தொந்தரவாகவும் உள்ளது,” என்றார் அவர்.

இந்நிலையில் கிழக்கு ஜாவா இந்தோனீசியர்கள், விரிசலடைந்த சுவர், உடைந்து விழுந்த கூரை ஓடுகள், சேதமடைந்த கடைகள் போன்றவற்றின் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

“சவுண்ட் ஹோரெக்” (sound horeg) என்று அழைக்கப்படும் இரைச்சலால் இது ஏற்பட்டது என்று வலைப்பதிவாளர்கள் கூறியுள்ளனர்.

“சவுண்ட் ஹோரெக்” என்பது ஜாவானிய மொழியில் நகருதல் அல்லது அதிர்வு என்று பொருள்.

இந்தக் காணொளிகள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.

கிழக்கு ஜாவா அதிகாரிகள் ஆகஸ்ட் மாதத்தில் இரைச்சலைக் கட்டுப்படுத்தவும் ஒலிபெருக்கிகளைக் பயன்படுத்த வேண்டிய இடங்கள், நேரங்கள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

“சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது அமைதி மற்றும் ஒழுங்கைப் பாதிக்காத வகையில் இரைச்சல் அளவை ஒழுங்குபடுத்த வேண்டும்,” என்று கிழக்கு ஜாவா ஆளுநர் கோஃபிஃபா இண்டார் பரவன்சா தெரிவித்தார்.

பள்ளிகள், மருத்துவமனைகள், அவசர மருத்துவ வாகனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நடமாடும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்