விமானத்தில் சமயப் போதனை; இருவருக்கு அபராதம்

விமானத்தில் சமயப் போதனை; இருவருக்கு அபராதம்

1 mins read
aaa515e8-c745-433c-b638-3375081c0496
64 மற்றும் 68 வயதுடைய இரு போதகர்களும், விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாகச் சோல் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 18ஆம் தேதித் தீர்ப்பை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சோல்: தென்கொரிய உள்நாட்டு விமானப் பயணத்தின்போது பயணிகளிடம் சத்தமாகச் சமயப் போதனை செய்து இடையூறு விளைவித்த சமய போதகர்கள் இருவருக்கு தலா 1 மில்லியன் வான் (S$920) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

64 மற்றும் 68 வயதுடைய அந்த இரு போதகர்களும், விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாகச் சோல் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 18ஆம் தேதித் தீர்ப்பை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி பிற்பகல் 3.40 மணியளவில் ஜேஜுவிலிருந்து கிம்போ நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. விமானச் சிப்பந்திகள் தடுத்தபோதிலும், 64 வயது போதகர் இருக்கைகளுக்கு இடையே உள்ள நடைபாதையில் நின்று கொண்டு, “இயேசுவை நம்பாவிட்டால் நீங்கள் நரகத்திற்குத்தான் செல்வீர்கள்,” என்று பயணிகளைப் பார்த்துச் சத்தமிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

மற்றொரு போதகரும் அவருடன் இணைந்து, “நீங்கள் நரகத்திற்குத்தான் செல்வீர்கள்,” என்று கூறியவாறே அங்குமிங்கும் நடந்து கூச்சலிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முயன்ற விமானச் சிப்பந்தியிடம், “எனக்கு உபதேசம் செய்ய வேண்டாம்,” என்று அவர்கள் திருப்பிக் கத்தினர்.

விமானச் சிப்பந்திகள் மற்றும் பயணிகளின் தொடர் புகார்களையும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் செய்த இந்தக் கலவரம் ஏறத்தாழ 13 நிமிடங்கள் நீடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாவிமானம்அபராதம்