பாலியில் அமெரிக்கர்களைக் குறிவைத்து காதல் மோசடி; பலர் கைது

1 mins read
e48084d8-50f0-483e-ad69-e0337285341d
பாலித் தீவு. - படம்: eatsandretreats.com / இணையம்

டென்பசார்: இந்தோனீசியாவின் பிரபல சுற்றுலாத்தளமான பாலித் தீவில் அமெரிக்க ஆடவர்களைக் குறிவைத்து காதல் மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலி தலைநகர் டென்பசாரில் வாடகை வீடு ஒன்றில் சந்தேகத்துக்குரிய செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை பலரைக் கைது செய்தது. மொத்தம் 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எழுவர் பெண்கள்.

“அவர்கள் பெண்களின் படங்களைக் கொண்டு பெண்களைப்போல் நடித்து போலி அடையாளத்துடன் பிறரைச் சிக்கவைத்தனர்,” என்று பாலி காவல்துறைத் தலைவர் டேனியல் ஆதித்யஜயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவோர், கம்போடியாவிலிருந்து செயல்படும் ஒருவருக்கு வேலை செய்ததை ஒப்புக்கொண்டனர் என்று திரு டேனியல் குறிப்பிட்டார். அமெரிக்க ஆடவர்களை ஈர்த்து அவர்களை தனிப்பட்ட தகவல்களை ஒப்படைக்கச் செய்ய மோசடிக்காரர்கள் அவ்வாறு செய்ததாகவும் அவர் சொன்னார்.

மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படுவோர், டெலிகிராம் செயலி மூலம் ஆடவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களுக்குப் போலியான இணைய முகவரிகளை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்கு ஆளாவோரிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பறிக்க சந்தேக நபர்களுக்கு மாதம் 200 டாலர் (257 வெள்ளி) வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது என திரு டேனியல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்