டெஹ்ரான்: அமெரிக்காவுடன் தாங்கள் மீண்டும் போரில் இறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஈரானின் புரட்சிக் காவற்படை புதன்கிழமை (மே 27) கூறியது.
அதேவேளை, தங்கள்மீது மேற்கொள்ளக்கூடிய எந்தத் தாக்குதலையும் கையாளத் தயாராய் இருப்பதாகவும் அப்படை தெரிவித்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நடப்பில் இருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக ஈரான் குற்றஞ்சாட்டிய மறுநாள் புரட்சிக் காவற்படை இவ்வாறு கூறியுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்ததிலிருந்து ஆக மோசமான தாக்குதல்களை அமெரிக்கா திங்கட்கிழமை (மே 25) மேற்கொண்டதையடுத்து தாங்கள் பதிலடி கொடுக்கத் தயாராய் இருப்பதாக ஈரான் சொன்னது.
லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போரில் சண்டைநிறுத்த ஒப்பந்தம் நடப்பில் இருந்துவரும்போதும் வன்முறை தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்துவருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (மே 26) இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் லெபனானில் 31 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் நால்வர் சிறார் என்று லெபனானிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பூசல் வெடித்தது. அதனால் உலகளவில் எரிசக்திச் சந்தைகள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டன.
“எதிரியின் பலவீனத்தால் போர் தொடரும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன. ஆயுதப் படைகள் தோட்டாக்கள் நிரம்பிய ஆயுதங்களுடன் காத்திருக்கின்றன,” என்று ஈரானின் புரட்சிக் காவற்படையின் கடற்படைப் பிரிவு அரசியல் விவகாரத் துறைத் தலைவரான முகம்மது அக்பார்ஸெடா கூறியதாக டாஸ்மின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தொடரும் சமரசப் பேச்சுவாரத்தை
போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட ஈரானும் அமெரிக்காவும் பல வாரங்களாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அந்தக் காலகட்டத்தில் இருதரப்பும் ஒன்றை மற்றொன்று தாக்கிப் பேசிவந்துள்ளன.
பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் வழிநடத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
போரில் எந்தத் தரப்பு வெற்றிபெறும் நிலையில் உள்ளது என்பதற்குத் தெளிவான அறிகுறிகள் ஏதும் இல்லை. பேச்சுவார்த்தையில் இடம்பெறும் முக்கிய அம்சங்களில் விட்டுக்கொடுக்க இருதரப்பும் தயாராய் இல்லை. ஹோர்முஸ் நீரிணை விவகாரம், ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகியவை முக்கிய அம்சங்களில் அடங்கும்.
போருக்குப் பதிலடியாக ஈரான், ஹோர்முஸ் நிரிணையைக் கிட்டத்தட்ட முழுமையாக முடியுள்ளது. அதற்குப் பதிலடியாக அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்களுக்கான போக்குவரத்தை முடக்கியது.

