கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஓர் இலகு ரயில் (எல்ஆர்டி) தடம்புரண்டது.
அம்பாங், ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி பாதைகளில் வியாழக்கிழமை (மே 28) காலை ரயில் சேவையில் இடையூறுகள் ஏற்பட்டன. சான் சோவ் லின் நிலையத்தில் தண்டவாள செயல்பாட்டு முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது.
அதனால் பல்வேறு பாதைகளில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தை ராப்பிட் கேஎல் ரயில் நிறுவனம் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது. சம்பவம் பதிவான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அவை நம்பகமானவை என்று கேஎல் ராப்பிட் உறுதிப்படுத்தியது.
“தடம்புரண்ட ரயில் பின்னர் நகர முடியாமல் இருந்தது. அதனால் அம்பாங், ஸ்ரீ பெட்டாலிங் பாதைகளில் சேவைத் தாமதமும் இடையூறுகளும் ஏற்பட்டன.
“சம்பவம் நிகழ்ந்தபோது ரயிலில் 25 பயணிகள் இருந்தனர்.
“பயணிகள் அனைவரும் நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டு வழிமுறைகளின்படி பாதகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை,” என்று ராப்பிட் கேஎல் தெரிவித்தது. சம்பவ இடத்தில் கோளாறு குறித்து விசாரணை தொடர்வதாகவும் அது குறிப்பிட்டது.
கோளாற்றைச் சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் ராப்பிட் கேஎல் கூறியது.

