செவார்ட்/அலாஸ்கா: சுற்றுலாச் சென்றிருந்த பயணிகளுடன் அலாஸ்காவின் துறைமுகத்தை அடைந்த சொகுசுக் கப்பல், அதனுடன் ஒரு உயிரிழந்த திமிங்கிலத்தின் உடலையும் உடன் சுமந்து வந்துள்ளது.
கடந்தவாரம் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ‘ராயல் கெரீபியன்’ நிறுவனத்தின் ‘ஒவேஷன் ஆஃப் த சீஸ்’ என்ற சொகுசுப் பயணக் கப்பல், அலாஸ்காவின் துறைமுக நகரான செவார்ட்டை வந்தடையும்போது அதன் முன்பாகத்தில் அந்த 18.6 மீட்டர் நீளமானப் பெண் திமிங்கிலத்தின் உடல் சிக்கியிருந்தது.
அத்திமிங்கிலம் கருவுற்றிருந்ததும் பிறகு கண்டறியப்பட்டது. அது எவ்வாறு அங்கு சிக்கிக்கொண்டது என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
உடற்கூறாய்வினால் கடற்கரை செல்லத் தடை
அலாஸ்காவின் தேசியப் பெருங்கடல் வளிமண்டல நிர்வாகமும், மீன்வளத் துறையும் உள்ளூர் நிறுவனம் திமிங்கிலத்தின் உடலை அருகில் உள்ள கடற்கரைக்கு உடற்கூறாய்வு நடத்த எடுத்துச்சென்றதாகத் தெரிவித்தன.
ஆய்வுகள் முறையாக நடப்பதை உறுதிசெய்ய அந்தக் கடற்கரையை பொதுமக்கள் தவிர்க்குமாறு அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
அந்த திமிங்கிலத்தை 168,666 டன் எடையுள்ள சொகுசுக் கப்பல் மோதியதால் அது உயிரிழந்ததா அல்லது ஏற்கெனவே திமிங்கிலம் இறந்த நிலையில் கப்பலில் அவ்விலங்கின் உடல் சிக்கிக்கொண்டதா என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

