சாபா வாக்காளர்களின் விருப்பங்களை மத்திய அரசாங்கம் மதிக்கிறது: அன்வார் இப்ராஹிம்

சாபா வாக்காளர்களின் விருப்பங்களை மத்திய அரசாங்கம் மதிக்கிறது: அன்வார் இப்ராஹிம்

படம்: ஏஎஃப்பி

30 Nov 2025 - 3:12 pm

1 mins read

பெட்டாலிங் ஜெயா: சாபா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் கூறவிரும்பிய தகவலுக்கு மலேசியாவின் மத்திய அரசாங்கம் முழுமையாய் மதிப்பளிப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

சாபாவின் வாக்காளர்கள் தங்களின் முடிவைத் தெளிவாய் வெளிப்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார். நியாயம் கிடைக்காததாலும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்ததாலும் அவர்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்திருந்ததாகத் திரு அன்வார் குறிப்பிட்டார். ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) மலேசியப் பிரதமர் அந்தத் தகவல்களைப் பதிவிட்டார்.

சாபா மக்கள் கூட்டணித் தலைவர் ஹஜிஜி நூரை அவர் பாராட்டினார். சாபாவின் முதலமைச்சராகத் திரு ஹஜிஜி நூர் இரண்டாம் தவணைக்காலத்துக்குப் பதவியேற்றுக்கொண்டுள்ள நிலையில் திரு அன்வாரின் கருத்துகள் வந்துள்ளன.

“கடந்த மூவாண்டில் மத்திய அரசாங்கம், தேங்கிக்கிடந்த விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் பணியில் ஈடுபட்டிருந்தது. சாபாவின் உரிமைகளும் விருப்பங்களும் அவற்றில் அடங்கும். அந்தக் குறுகிய காலத்தில், ‘மலேசிய உடன்பாடு 1963’இன் தொடர்பில் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

சாபா விவகாரத்தில் தமது அரசாங்கம் தொடர்ந்து ஒரே மாதிரியாக நடந்துகொள்ளும் என்றார் திரு அன்வார். நியாயமான, வளப்பமான சாபாவை உருவாக்குவதில் அது தொடர்ந்து பணியாற்றும் என்று அவர் சொன்னார். சாபா மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்படமாட்டாது என்பதை மலேசியப் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்