நியூயார்க்: அமெரிக்கப் படைகளால் சிறை பிடிக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிக்கலாஸ் மதுரோ அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டை ஜனவரி 5ஆம் தேதி திரு மதுரோ மறுத்தார்.
தாம் தொடர்ந்து வெனிசுவேலாவின் அதிபராகப் பதவி வகிப்பதாக அவர் அடித்துக் கூறுகிறார்.
எனவே, உலகத் தலைவர்களுக்கு இருக்கும் சலுகைகள் அவருக்கும் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரு மதுரோ சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்கு பெற்றிருப்பதாக அவரது வழக்கறிஞர் திரு பேரி போலாக் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 3ஆம் தேதியன்று திரு மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்க ராணுவம் கடத்தியதாக அவர் குறைகூறினார்.
இதன் காரணமாக அமெரிக்காவுக்கு எதிராக நீண்ட வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று அவர் சூளுரைத்தார்.
அனைத்துலகச் சட்டத்தின்கீழ் 63 வயது திரு மதுரோ, ஒரு நாட்டின் தலைவர் என்கிற முறையில் சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்கு பெற்றவரா என்ற கேள்வி மேலோங்கி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், 2018ல் வெனிசுவேலாவில் நடைபெற்ற தேர்தல் சர்ச்சைக்குரியது என்று அமெரிக்கா வாதிடுகிறது. எனவே, அவரை வெனிசுவேலாவின் அதிபராக ஏற்க முடியாது என்று அது கூறுகிறது.
ஆனால், இதை முடிவு செய்ய அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை என்றும் திரு மதுரோ தொடர்ந்து வெனிசுவேலாவின் அதிபராகப் பதவி வகிக்கிறார் என்றும் வெனிசுவேலாவின் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

