கோலாலம்பூர்: வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மலேசிய ஆயுதப் படை, இணையப் பாதுகாப்புப் பிரிவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
அப்பிரவு, மலேசிய ஆயுதப் படையின் நான்காவது பிரிவாக விளங்கும். இது, நவீன காலத்தில் மாறிவரும் மிரட்டல்களைக் கையாள்வதற்கான உத்திபூர்வ நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் இணையம், மின்காந்தத் துறைகளில் போட்டியும் சண்டையும் அதிகரித்துவருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசிய ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் மாலிக் ரசாக் சுலாய்மான் கூறினார்.
புதிய பிரிவுக்கான பணிகளை மேற்கொள்ளக் குழு
புதிய பிரிவை அமைப்பதற்கான பணிகளை வழிநடத்துவதற்காக இணையப் படை சாராம்சக் குழு (Cyber Force Nucleus Team) என்ற பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதிய இணையப் பாதுகாப்பு அமைப்புக்குத் திட்டமிடுதல், ஒருங்கிணைப்பு, ஆற்றல் மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழிநடத்த அப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இணையப் படை சாராம்சக் குழுவை பேராக் மாநிலத்தில் உள்ள மலேசிய அரசக் கடற்படைத் தளத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 19) அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜெனரல் மாலிக் ரசாக் சொன்னார்.
“ஏற்கெனவே தங்களின் நடவடிக்கைகளில் இந்தச் சேவையைச் சேர்த்துக்கொண்டுள்ள நாடுகளைக் கவனித்தோம். இது ஓர் அவசரத் தேவையாகும். இதில் பின்தங்கிப்போக முடியாது,” என்று அவர் விவரித்தார்.
“இந்த சாராம்சக் குழு, திட்டமிடும் பணிகளை மேற்கொண்டு இணையப் பாதுகாப்புப் பிரிவு யோசனையை எவ்வாறு நனவாக்குவது என்பதை ஆராய்ந்து அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்றவாறு அதை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும். இது 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்,” என்று ஜெனரல் மாலிக் ரசாக், 93வது மலேசிய ஆயுதப் படை தினக் கொண்டாட்டத்தின்போது நடந்த சிறப்பு நேர்காணலின்போது கூறினார். இந்த இலக்குக்கு ஏற்றவாறு மலேசிய ஆயுதப் படை தொடர்ந்து இணைய, மின்காந்தத் துறைகளில் திறன்களை வளர்த்துக்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்காப்பு அமைச்சர் கூறியிருந்தது
நவீன காலத்தில் காணப்படும் அச்சுறுத்தல்களைக் கையாள தனது அமைச்சின் நான்காவது சேவையாக இணையப் பாதுகாப்புப் படையை உருவாக்குவதற்கான திட்டத்தைத் தாங்கள் வரைந்துவருவதாகத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நூர்தின் முன்னதாகக் கூறியிருந்தார்.
