மலேசியாவின் கனிமவளத்துறையை மேம்படுத்த கட்டப்படும் காந்த ஆலை

2 mins read
9d870ace-892a-4396-a08c-d8e8c803ec06
கனிமவளம் தொடர்பான திட்டம் என்பதால் இதை மலேசியாவின் வர்த்தக அமைச்சர் மிக உன்னிப்பாகக் கண்காணிப்பார் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது. - படம்: இபிஏ
multi-img1 of 2

கோலாலம்பூர்: மலேசியாவின் கனிமவளத்துறையை மேம்படுத்த 600 மில்லியன் ரிங்கிட் (S$185.7 மில்லியன்) பெறுமானமுள்ள சக்திவாய்ந்த காந்த ஆலை கட்டப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்திருப்பதாக பெர்னாமா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகாங் மாநிலத் தலைநகர் குவாந்தானில் 3,000 டன் சூப்பர் காந்த உற்பத்தி ஆலையைக் கட்ட கடந்த ஜூலை மாதத்தில் ஆஸ்திரேலியாவின் லைனாஸ் கனிமவள நிறுவனமும் தென்கொரியாவின் ஜேஎஸ் லிங்க் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

லைனாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலை ஒன்றுக்கு அருகில் காந்த ஆலை அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கனிமவளம் தொடர்பான திட்டம் என்பதால் இதை மலேசியாவின் வர்த்தக அமைச்சர் மிக உன்னிப்பாகக் கண்காணிப்பார் என்று பிரதமர் அன்வார் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.

“ஆலையைக் கட்டுவதற்கான நிலத்தை ஜேஎஸ் லிங்க் நிறுவனம் கொள்முதல் செய்துவிட்டது. கட்டுமானப் பணிகளைத் தொடங்க அது விரும்புகிறது. எனவே, இது வெறும் புரிந்துணர்வுக் குறிப்பு அல்ல. அதையும் கடந்து அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டது. முதலீடு செய்யப்பட்டுவிட்டது. நிலமும் தயாராக உள்ளது. எஞ்சியிருப்பது பணிகளை விரைவுபடுத்துவது மட்டுமே,” என்று திரு அன்வார் தெரிவித்தார்.

இந்தக் கூட்டு முயற்சி மலேசியாவின் அதிநவீன சாதனங்கள் மற்றும் தூய தொழில்நுட்பத்துறைகளை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

அதே சமயம், முக்கிய கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலியை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு வலுசேர்க்கப்படும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

மலேசியாவில் ஏறத்தாழ 16.1 மில்லியன் மெட்ரிக் டன் கனிமங்கள் இருப்பதாக மலேசிய அரசாங்கம் தோராயமாக மதிப்பிட்டுள்ளது.

ஆனால் அவற்றைப் பூமியிலிருந்து தோண்டி எடுத்து தேவையான பணிகளை மேற்கொள்ள தேவையான தொழில்நுட்பம் மலேசியாவிடம் போதுமான அளவுக்கு இல்லை.

எனவே, கனிமங்களைப் பூமியிலிருந்து தோண்டி எடுத்து, தேவையான பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீடுகளையும் தொழில்நுட்பங்களையும் அது நாடுகிறது.

மின்சார வாகனங்கள், பகுதிமின்கடத்திகள், ஏவுகணைகள் ஆகியவை உட்பட உயர் தொழில்நுட்ப உற்பத்திக்குக் கனிமங்கள் அவசியமானதாக உள்ளன.

கனிமங்கள் தொடர்பான செயலாக்கப் பணிகள் குறித்து மலேசிய அரசாங்கம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முக்கிய கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலியைப் பல்வகைப்படுத்த அமெரிக்காவின் ஒத்துழைப்பையும் மலேசியா நாடுகிறது.

இதுதொடர்பாக, கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்