பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதும் அவரின் துணைவியார் சிட்டி ஹஸ்மாவும், நோன்புப் பெருநாளுக்கு முந்திய நாளான வெள்ளிக்கிழமை (மார்ச் 20) மறுசீரமைக்கப்பட்ட மரபுடைமைக் கட்டடம் ஒன்றை பார்வையிடச் சென்றனர்.
சமூக ஊடகத்தில் வலம் வரும் பதிவொன்றில் அவர்கள் இருவரும் சுல்தான் அப்துல் சமத் கட்டடத்தைச் (BSAS) சுற்றிப்பார்க்கச் செல்வது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தலைநகரின் மேம்பாட்டுத் திட்டத்தின் அங்கமாக, கடந்த ஓராண்டாக அங்கு மேற்கொள்ளப்பட்டுவந்த மறுசீரமைப்புப் பணிகள் பற்றி தம்பதிக்கு விளக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி பொதுமக்களுக்கு அது திறந்துவிடப்பட்டது.
அந்தக் கட்டடம் 1897ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஏறக்குறைய 129 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் அந்தக் கட்டடம் பற்றி இத்தம்பதி இருவரும் நினைவுகூர்ந்தனர். திருவாட்டி சிட்டி ஹஸ்மா தமது சிறு வயதில் அப்பகுதியில் வளர்ந்துவந்ததைப் பற்றி நினைவூட்டினார்.
இருவருடன் அவர்களது மகன் மொக்சானி மகாதீர் உடன் இருந்தார். அந்தக் கட்டடத்தில் பெற்றோருக்கு தங்க அறை உள்ளதா என்று அவர் நகைச்சுவையாகக் கேட்பதும் பதிவில் உள்ளது.
அங்கு அவரை அழைத்துச் சென்ற வாகனத்தில் இருந்தபடி, டாக்டர் மகாதீர், மலேசியர்கள் அனைவருக்கும் அமைதியும் வளமும் நிறைந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
கடந்த ஜனவரி மாதம், டாக்டர் மகாதீர், தனது இல்லத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் பல வாரங்கள் தங்கி சிகிச்சை எடுக்க நேரிட்டது.

