பணிப்பெண் துன்புறுத்தல்: இருவர் மீது வெவ்வேறு குற்றச்சாட்டுகள்

பணிப்பெண் துன்புறுத்தல்: இருவர் மீது வெவ்வேறு குற்றச்சாட்டுகள்

படம்: பெரித்தா ஹாரியான்

29 Sep 2026 - 8:07 pm

2 mins read

பணிப்பெண்களைத் துன்புறுத்திய வெவ்வேறு வழக்குகளில் ஒரு ஆடவர்மீதும் மாது ஒருவர் மீதும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) குற்றஞ்சாட்டப்பட்டது.

முகம்மது அஸ்வான் சுஹைமி என்ற 40 வயது ஆடவர் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

டே சியோக் கெங் என்ற 76 வயது மூதாட்டிமீது 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் அவரது பணிப்பெண்ணைத் தாக்கிய 10 குற்றச்சாட்டுகள் உள்ளடங்கும். மேலும் அந்தப் பெண்ணுக்குத் தொல்லை விளைவித்தது, வன்முறைக்கு உட்படுத்தியது, பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படும் வகையில் பொறுப்பற்ற செயல் புரிந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் முதியவர்மீது சுமத்தப்பட்டன.

நீதிமன்ற ஆவணங்களின்படி, டே அந்தப் பணிப்பெண்ணை 2024 அக்டோபர் 27ஆம் தேதி முதல் 2025 மார்ச் 16ஆம் தேதி வரை பல சம்பவங்களில் துன்புறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

பணிப்பெண்ணைக் கிள்ளியது, தாம் ஓட்டிய வாகனத்தைக் கொண்டு அவரை மோத முயன்றது, தகாத வார்த்தைகளை அவர்மீது உபயோகித்தது, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து அறைந்தது, மின்தூக்கியில் தாம் அணிந்த காலணியைக் கொண்டு பணிப்பெண்ணின் முகத்தில் அடித்தது, கைத்தடியைக் கொண்டு தாக்கியது போன்ற பல குற்றங்கள் உள்ளடங்கும்.

அவரது வழக்கு அக்டோபர் 28ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

அஸ்வான் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மூதாட்டிக்கு சம்பந்தம் அற்றவை.

மார்ச் 9ஆம் தேதி முதல் பலமுறை வீட்டுப் பணிப்பெண்ணை அவர் துன்புறுத்தியுள்ளார். உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள வீட்டில் பணிப்பெண்ணை இடது இடுப்பில் இருமுறை உதைத்தது, ‘மோப்’ துடைப்பத்தைக் கொண்டு தலையில் அழுத்தியது, உள்ளங்கையால் தோள்பட்டையில் தாக்கி பணிப்பெண் தடுமாறி சுவரில் மோதி விழச் செய்தது, தலையில் அடித்தது, பிளாஸ்டிக் போத்தலைக் கொண்டு தலையில் அடித்தது போன்ற பல குற்றங்களை அவர் புரிந்துள்ளார்.

அவரது வழக்கு அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பணிப்பெண்ணைத் தாக்கிய ஒவ்வொரு குற்றத்துக்கும் குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் சிறை, $10,000 அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
பணிப்பெண்துன்புறுத்தல்தாக்குதல்நீதிமன்றம்தண்டனைவிசாரணைஒத்திவைப்புதீர்ப்பு