வாஷிங்டன்: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் இந்தோனீசியாவுடன் மாபெரும் தற்காப்பு பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர் ஸ்ஜாஃப்ரி ஸ்ஜாம்சோதீன் தற்காப்பு பங்காளித்துவம் தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) கையெழுத்தானது.
இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தப் பெரிய தற்காப்பு ஒப்பந்தம் அமைந்துள்ளது என்று திரு ஹெக்செத் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
ராணுவ நவீனமயமாக்கல், திறன் மேம்பாடு, பயிற்சி, தொழில்முறை ராணுவக் கல்வி, செயல்பாட்டு ஒத்துழைப்பு உள்ளிட்டவை புதிய பங்காளித்துவ உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து இரண்டு நாடுகளும் கூட்டறிக்கையும் வெளியிட்டுள்ளன.
இண்டோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நீடிக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவுடனான தற்காப்பு ஒப்பந்தம் நாட்டின் ராணுவ பலத்தை மேலும் வலுவாக்கும் என்று இந்தோனீசியா தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் பலமான ராணுவத்தைக் கொண்ட நாடாக இந்தோனீசியா இருப்பதாகத் தற்காப்பு தரவுகளை வழங்கும் குலோபல் ஃபயர்பவர் (Global Firepower) தெரிவித்துள்ளது.

