பேங்காக்: பேங்காக்கின் சைனாடவுனில் உள்ள ‘டிரொக் பொ’ சமூகத்தில் ஜூலை 6ஆம் தேதி பெரிய அளவிலான தீச்சம்பவம் நிகழ்ந்தது.
இரவு 8.40 மணிவாக்கில், ‘சம்பாந்தாவோங்’ மாவட்டத்தில் உள்ள ‘யவ்வராட்’ சாலையில் தீ மூண்டது.
அதில் இரண்டு தீயணைப்பாளர்களுக்குக் காயம் ஏற்பட்டதோடு, குறைந்தது 30 பேர் புகையினால் பாதிக்கப்பட்டனர்.
முப்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களோடு, 11 நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர மூன்று மணி நேரம் பிடித்தது.
ஒரே ஒரு தண்ணீர்க் குழாய் மட்டுமே இருந்த குறுகலான சந்தில் தீ ஏற்பட்டது. அதனால் தண்ணீர் பெறுவதில் தீயணைப்பாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.
தீயைக் கட்டுப்படுத்த, அவர்கள் அருகில் உள்ள பேரிடர் மீட்புப் பிரிவினருடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியிருந்தது.
தீ, வீட்டு எண் 12ல் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொண்டூழியத் தீயணைப்பாளர் ஒருவர் தீயை அணைக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கியதால் காயமடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து மின்சாரத் தடை ஏற்பட்டது. தண்ணீர் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
அருகில் உள்ள இடங்களுக்கும் தீ பரவுவதைத் தடுக்க தீயணைப்பாளர்கள் போராடினர். இருப்பினும், பலத்த காற்றால் தீ ‘நியூ எம்ப்பயர் ஹோட்டல்’க்கு விரைவில் பரவியது.
சேதமுற்ற ஹோட்டலில் சிக்கியிருந்த மூவரை மீட்புக் குழுக்கள் பாரந்தூக்கிகளைக் கொண்டு வெளியேற்றின.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தீச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

