புருணை அமைச்சரவையில் அதிரடி மாற்றம்; இளவரசர்களுக்கு முக்கியப் பதவிகள்

புருணை அமைச்சரவையில் அதிரடி மாற்றம்; இளவரசர்களுக்கு முக்கியப் பதவிகள்

2 mins read
31199fda-3a55-42aa-a45e-d6e2e5b82415
புருணை மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பண்டார் ஸ்ரீ பகவான்: புருணை நாட்டின் அமைச்சரவையில் மிகப் பெரிய அதிரடி மாற்றங்களை அந்நாட்டு மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா வியாழக்கிழமையன்று (ஜூன் 4) அறிவித்தார். அவரது இரு புதல்வர்கள் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுல்தான் ஹஸனல் போல்கியா 1967ஆம் ஆண்டு அரியணை ஏறினார். உலகிலேயே மிக நீண்டகாலம் ஆட்சியில் இருக்கும் மன்னரான இவர், அடுத்த ஆண்டு தமது வைர விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறார். 79 வயது சுல்தான் ஹசனல் போல்கியா, கடந்த ஜனவரி மாதம் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே பங்கேற்று வருகிறார்.

அரசாங்கத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சுல்தான் ஹஸனல் போல்கியா, பூருணையின் பிரதமர், தற்காப்பு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகிய தலையாய பொறுப்புகளைத் தொடர்ந்து தாமே வகிக்கப்போவதாகத் தொலைக்காட்சி உரையில் அறிவித்தார்.

அதே வேளையில், அவரது மகனான இளவரசர் அப்துல் மாலிக், முதன்முறையாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு பிரதமர் அலுவலக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவரும் குதிரையேற்றப் போட்டி வீரருமான அவரது இன்னொரு மகனான இளவரசர் அப்துல் மத்தீன், வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவியை இதற்கு முன்பு மன்னரே வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் ஹசனல் போல்கியாவின் மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான அல்-முஹ்தாடி பில்லா, பிரதமர் அலுவலகத்தின் மூத்த அமைச்சர் பொறுப்பில் நீடிக்கிறார்.

இந்தப் புதிய அமைச்சரவை மாற்றத்தில் கல்வி அமைச்சர் உட்பட பல முக்கியப் பொறுப்புகளுக்குப் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புருணை வரலாற்றிலேயே அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறை ஆகும்.

குறிப்புச் சொற்கள்