ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு மலாக்கா தேர்தல் நடத்தப்படலாம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு மலாக்கா தேர்தல் நடத்தப்படலாம்

2 mins read
fb81f46e-9c6c-4267-b25c-2e0a64d00398
மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் 30ஆம் தேதியன்று முடிவடைகிறது. - படம்: மலாக்கா பயணத்துறைக் கழகம்

அலோர் காஜா: ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு மலாக்கா மாநிலத் தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோ சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானின் நிலைமை மலாக்காவின் நிலைமையிலிருந்து வேறுபட்டது என்றும் எனவே எதிர்காலத்தில் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் 30ஆம் தேதியன்று முடிவடைகிறது.

“அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் தேதி வரை, நாங்கள் (தேசிய முன்னணி) அரசாங்க விவகாரங்களை நிர்வகித்து, மக்களின் நலனைக் கவனித்துக் கொள்வோம்.

“நாங்கள் ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களையும் பின்பற்றவில்லை. இரு மாநிலங்களிலும் தேர்தல்களுக்கு உதவ கட்சி வளங்களைப் பயன்படுத்துவோம்,” என்று சனிக்கிழமை இரவு கம்போங் புலாவ்வில் உள்ள தமது இல்லத்தில், ஹஜ் யாத்திரை முடித்துத் திரும்பியதைக் குறிக்கும் ஒரு நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான பொருத்தமான தேதியைத் தீர்மானிப்பதற்கு முன்பு, ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களின் முடிவுகளை ஆய்வு செய்வேன் என்றும் அப்துல் ரவுஃப் மேலும் கூறினார்.

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானில் நடந்தது போல, மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க தமக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தின் எதிர்காலம் குறித்த எந்தவொரு சாத்தியத்தையும் அப்துல் ரவுஃப் நிராகரிக்கவில்லை. அரசியலை 1,001 சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு கலை என்று அவர் விவரித்தார்.

2021ஆம் ஆண்டு மலாக்கா மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி 21 இடங்களை வென்று மாநில அரசை அமைத்தது. அதே நேரத்தில், பக்கத்தான் ஹரப்பான் ஐந்து இடங்களையும், பெரிகத்தான் நேஷனல் இரண்டு இடங்களையும் கைப்பற்றின என்று பெர்னாமா கூறியது.

நெகிரி செம்பிலான், ஜோகூர் மாநிலச் சட்டமன்றங்கள் முறையே ஜூன் 5ஆம் தேதியும் ஜூன் 1ஆம் தேதியும் கலைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
மலாக்காஎதிர்காலம்ஜோகூர்