புத்ராஜெயா: வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியுடன் இணைவது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பக்கத்தான் ஹராப்பனின் தேர்தல் இயக்குநர் அமீருடின் ஷாரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் என்று மலேசியாவின் தொடர்புதுறை அமைச்சரும் பக்கத்தான் ஹரப்பானின் தகவல் தொடர்பு இயக்குரும் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் தேசிய தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஃபாஹ்மி, பிரதமர் அன்வாருக்கும் திரு அமீருடினுக்கும் இடையிலான இச்சந்திப்பு நடைபெற்றதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“கடந்த ஓரிரு நாள்களாகக் தலைவர்களுக்கு இடையே பல சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனால் மலாக்கா தேர்தல் கூட்டணி குறித்து அதில் விவாதிக்கப்பட்டதா என்பது பற்றி எனக்குத் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறு மாநிலத் தேர்தல்களின்போது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்து போட்டியிட்டன. ஆனால், அண்மையில் நடந்த நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மலாக்காவில் நடைபெற்ற மாநாட்டில் பக்கத்தான் ஹராப்பான் தலைவரான பிரதமர் அன்வார் கூறிய கருத்துக்களை பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் உத்தி குறித்து திரு ஃபாஹ்மி பேசுகையில் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் மூத்த தலைவர்களை மீண்டும் கட்சியின் பக்கம் ஈர்ப்பதோடு, கூட்டணியின் முழு பலத்தையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை அன்வார் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
தியேன் சுவா மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் போன்ற மூத்தத் தலைவர்களை மீண்டும் அரவணைத்துச் செல்வது தேர்தல் உத்திகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
டாக்டர் சேவியர் பிகேஆர் கட்சிக்குத் திரும்பியதை உறுதிப்படுத்தியுள்ளார், தியேன் சுவாவும் பிரதமர் அன்வாரின் அழைப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
இதனிடையே, மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் கண்மூடித்தனமாகத் தேர்தல் உடன்பாடு செய்யப்போவதில்லை எனத் தேசிய முன்னணியின் தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி கூறியுள்ளார்.
இதுகுறித்த இறுதி முடிவை மாலாக்கா மாநிலத்தின் தேசிய முன்னணிப் பிரிவு மற்றும் மலாக்கா முதலமைச்சர் திரு அப் ராவுஃப் யுசோ எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், மலாக்கா தேர்தலுக்காகப் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தேசிய முன்னணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் தேசிய முன்னணி கூட்டணி பக்கத்தான் ஹரப்பானுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தால் அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.


