மலாக்கா காவல்துறையின் துப்பாக்கிச்சூடு, கொலை என மறுவகைப்படுத்தப்பட்டது

2 mins read
a119953d-0178-46d3-8cd0-be17e7dad288
காவல்துறையால் சுடப்பட்டு மாண்ட மூவரின் குடும்பத்தினரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் குழுவினர். - படம்: அருண் துரைசாமி ஃபேஸ்புக்

அறிவாளோடு தாக்கியதாக மூவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மலாக்கா காவல்துறையினர் கொலைக் குற்றத்துக்காக விசாரிக்கப்படுவர்.

பொதுமக்களும் உயிரிழந்த மூவரின் குடும்பங்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த பிறகு ஆழமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு இணங்க மலேசியத் தலைமைச் சட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) ஆணை பிறப்பித்த பிறகு, முதலில் கொலை முயற்சி என்று விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு தற்போது கொலை என்று மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.

தலைமைச் சட்ட அலுவலக ஆணையை பாதிக்கப்பட்டுள்ளோரின் குடும்பங்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், ஆரம்பத்திலேயே ஏன் வழக்கைக் கொலைக் குற்றம் எனக் குறிப்பிடவில்லை என்று பிரதமர் அலுவலக, சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத் துறை துணை அமைச்சர் எம்.குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மறுவகைப்படுத்துதல் வரவேற்கப்பட்டாலும் விசாரணை உடனடியாகவும் முழுமையாகவும் நடந்தால்தான், அரசாங்க அமைப்புகளின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடரும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 24ஆம் தேதி, டுரியான் துங்கால் என்ற மத்திய மலாக்கா வட்டாரத்தில் நிகழ்ந்ததாகக் காவல்துறை குறிப்பிடும் சம்பவத்தைக் கொல்லப்பட்ட மூன்று இந்திய இளையர்களின் குடும்பத்தார் மறுத்து வருகின்றனர்.

“அங்குள்ள பனைமரத் தோட்டத்தில் அன்று அதிகாலை 4 மணியளவில் அந்த மூவரில் ஒருவர் அறிவாளால் காவல்துறை அதிகாரியைத் தாக்கி அவரது இடது கையைப் படுகாயப்படுத்திவிட்டார். அதனால் மூவரையும் ஒரு காவல்துறை அதிகாரி சுட்டுவிட்டார். எனவே காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக்கொள்ள அவர்களைச் சுட்டனர்,” என்று மலாக்கா காவல்துறைத் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்திருந்தார்.

‘டுரியான் துங்கால் கேங்’ என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த மூவரும் மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் 20 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குக் காரணமானவர்கள் எனவும் திரு ஸுல்கைரி கூறியிருந்தார்.

எம்.புஸ்பநாதன், 21, டி.பூவனேஸ்வரன், 24, ஜி.லோகேஸ்வரன், 29, ஆகியோரின் குடும்பங்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள், அந்த ஆடவர்கள் ‘மரண தண்டனை பாணியில்’ காவல்துறையினரால் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்