மலாக்கா சட்டமன்றம் செப்டம்பர் 23ல் கலைக்கப்படும்

மலாக்கா சட்டமன்றம் செப்டம்பர் 23ல் கலைக்கப்படும்

படம்: பெர்னாமா

22 Sep 2026 - 7:46 pm

2 mins read

மலாக்கா: 16வது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், மலாக்கா மாநிலச் சட்டமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 23) கலைக்கப்படவுள்ளது.

மலாக்காவில் உள்ள ‘ஸ்ரீ நெகிரி’ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநில முதல்வர் அப் ரவூஃப் யூசோ இந்தத் தகவலை அறிவித்தார்.

சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலை மலாக்கா ஆளுநர் முகமது அலி ருஸ்தம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இந்தக் கலைப்பு நடவடிக்கையுடன் 15வது மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்த நடைமுறைகள் சட்டப்படியும், சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளின் முடிவுகளின்படியும் மேற்கொள்ளப்படும்.

“சட்டத்தின்படி தமக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில் ஆளுநர் வழங்கிய ஒப்புதலுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் இப்ராஹிம் டுரும், தேர்தல் ஆணையத்திடம் சட்டமன்றக் கலைப்பு அறிவிப்பைச் சமர்ப்பித்திருந்தார் என்று அப் ரவூஃப் கூறினார்.

கடந்த மலாக்கா மாநிலத் தேர்தல் 2021 நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது.

இத்தேர்தலில் மொத்தம் உள்ள 28 இடங்களில் தேசிய முன்னணி 21 இடங்களைக் கைப்பற்றி, மாநில அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றது.

அந்த 21 இடங்களில், அம்னோ 18 இடங்களையும், மலேசிய சீனர் கட்சி இரண்டு இடங்களையும், மலேசிய இந்திய காங்கிரஸ் ஓர் இடத்தையும் வென்றன.

பக்கத்தான் ஹராப்பான் ஐந்து இடங்களைப் பெற்றது; இதில் டிஏபி மூலம் நான்கு இடங்களும், அமானா மூலம் ஓர் இடமும் கிடைத்தன. அதேவேளையில், பெரிக்கத்தான் நேஷனல் இரண்டு இடங்களை வென்றது.

இதற்கிடையே, புதன்கிழமை முதல் மலாக்கா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டாலும், மாநில அரசின் செயல்பாடுகள் வழக்கம் போலவே தொடரும் என்று முதல்வர் அப் ரவூஃப் யூசோ உறுதியளித்துள்ளார்.

மாநில நிர்வாகம், பொதுச் சேவை, பொது நலன் சார்ந்த பணிகள், பாதுகாப்பு, அரசின் அன்றாடச் சேவைகள் ஆகியவை வழக்கம் போலவே செயல்படும் என்று அவர் கூறினார்.

“சட்டமன்றக் கலைப்பைத் தொடர்ந்து, தேர்தல் செயல்முறைக்குப் பிறகு புதிய மாநில அரசு அமையும் வரை, மாநில அரசு ஒரு ‘பராமரிப்பு அரசாங்கமாக’ தனது பொறுப்புகளை நிறைவேற்றும்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலாக்காமாநில அரசுசட்டமன்றம்