மலாக்காவில் நீர்ச்சறுக்கு விபத்து: இரு பெண்கள் படுகாயம்

மலாக்காவில் நீர்ச்சறுக்கு விபத்து: இரு பெண்கள் படுகாயம்

2 mins read
0877a550-f44b-4366-be25-9feabaeb7c81
மலேசியாவின் மலாக்காவிலுள்ள ஆயர் குரோவில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற கேளிக்கை பூங்காவில், நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் மிதவையிலிருந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்தனர். - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

ஆயர் குரோ: மலேசியாவின் மலாக்காவிலுள்ள ஆயர் குரோவில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற கேளிக்கை பூங்காவில், நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் மிதவையிலிருந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்தனர்.

46 வயது பெண்ணின் தலையில் சிறிய அளவிலான ரத்தக் கட்டி ஏற்பட்டுள்ளதாகவும் 31 வயது பெண்ணுக்குக் மூளையதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மலாக்கா காவல்துறை தெரிவித்தது.

ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில், அந்த இரு பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் அந்த கேளிக்கை பூங்காவுக்குச் சென்றிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இருவர் அமர்ந்து செல்லக்கூடிய மிதவையில் அவர்கள் நீர்ச்சறுக்குச் சரிவில் இறங்கிக்கொண்டிருந்தபோது வழியில் ஏதோ ஒரு பொருளின் மீது மிதவை மோதியதாகத் தெரியவந்துள்ளது.

சரிவில் அமர்ந்து சென்றபோது தமது தலை சுவரில் மோதியதாகவும் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை என்றும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண் கூறினார். மேலும், அவருக்குத் தாடையின் கீழ்ப் பகுதியில் காயமும் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் வலியும் வலது முட்டியில் வெட்டுக் காயமும் ஏற்பட்டது.

உடனடியாக அவர் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எலும்பு முறிவுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றாலும் சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவரது தலையின் வலதுபுறத்தில் சிறிய ரத்தக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளையில், நீர்ச்சறுக்குச் சரிவில் இறங்கும்போது நினைவிழந்த மற்றொரு பெண், சரிவின் திறந்தவெளிப் பகுதியை அடைந்த பின்னரே நினைவுக்கு வந்ததாகத் தெரிவித்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது; இருப்பினும் வேறு பெரிய காயங்கள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமலாக்காகாயம்