பெட்டாலிங் ஜயா: மலேசியாவின் சில பகுதிகளில் இவ்வாண்டு மலேரியா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுச் சுகாதார நிபுணர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த உயர்வுக்குப் பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கு 2022ஆம் ஆண்டு பதிவான மலேரியா பாதிப்பை, இவ்வாண்டிற்கான எண்ணிக்கை இப்போதே விஞ்சிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு 404 பேர் மலேரியா தாக்குதலுக்கு ஆளானதாகப் பதிவானது.
இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி கிளந்தானில் 215 பேரும், சாபாவில் 840 பேரும், திரெங்கானுவில் 26 பேரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.
2018 முதல் 2021 வரை மலேசியாவில் யாருக்கும் மலேரியா நோய் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. அதனால் அண்மையப் புள்ளிவிவரங்கள் கவலை அளிக்கக்கூடியவையாக உள்ளன.
மலேசியா டெங்கி தொற்றுப் பரவலைச் சமாளித்துவரும் அதேவேளையில், மலேரியா பாதிப்பும் அதிகரித்துள்ளது.
‘எல் நினோ’ பருவநிலையால் ஏற்பட்டுள்ள வெப்பமான, வறண்ட வானிலை டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை கூடியதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பெண் கொசு கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது.
இந்நிலையில் விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவக்கூடிய மலேரியா நோய் தொடர்ந்து அக்கறைக்குரிய விவகாரமாக உள்ளதாய் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட குரங்குகளிலிருந்து கொசுக் கடிகள் மூலம் மலேரியா நோய் மனிதர்களுக்குப் பரவுவதால், பாதிக்கப்பட்ட இடங்களில் பெரிய அளவில் ரத்தச் சோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவக்கூடிய மலேரியா நோய்ச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் மலேசியா புதிய மிரட்டலைச் சந்திப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸாலிஹா முஸ்தபா கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி கூறியிருந்தார்.