தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் ஒருவகை குரங்கால் மலேரியா அச்சுறுத்தல்

1 mins read
0a48d6f0-2f79-43bf-a013-82557556f1f8
மெக்காகெ வகை குரங்கு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மலேரியா தொற்றைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களை வெளிப்படுத்த இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதன் தொடர்பில் நல்ல மேம்பாடு காணப்பட்டிருந்தாலும் சவால்கள் இன்னும் இருக்கின்றன. மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, பருவநிலை மாற்றம், விலங்குகளிடையே மலேரியா தொற்று இருப்பது போன்ற சவால்கள் தொடர்கின்றன.

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பி.நோலெசி (P.knowlesi) வகை மலேரியா தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்நாடுகளில் பொதுவாக வனப்பகுதிகளில் இந்நிலை உருவாகியுள்ளது. அப்பகுதிகளில் மனிதர்களும் மெக்காகெ (macaques) வகை குரங்குகளும் ‘ஒன்றாக’ வசிப்பது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப் பகுதிகள் அழிக்கப்படுவது, நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவது உள்ளிட்ட காரணங்களால் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு மலேரியா பரவுவது அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இதுபோன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களால் மனிதர்களுக்கும் கொசுக்கள், மெக்காகெ குரங்குள் போன்ற விலங்குகளுக்கும் அதிகத் தொடர்பு ஏற்படுவதால் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு மலேரியா தொற்று அதிகம் ஏற்படுகிறது.

மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் மலேசியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு மலேரியா பரவிவருவது அந்நாட்டில் சவாலாக இருக்கிறது.

நிலைமையைச் சமாளிக்க மக்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு மலேரியா பரவும் அபாயம் உள்ள வனப்பகுதிக்குள் செல்லும்போது நீளக்கை சட்டை அணிவது, தேவைப்படும்போது தடுப்பு மருந்தை உட்கொள்வது போன்றவை அந்நடவடிக்கைகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்