பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பன்முகத்தன்மையைப் பேணவும் தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் இந்து, முஸ்லிம் சமூகப் பேராளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள முயற்சி, நாட்டின் சமூக முதிர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று பினாங்கு மாநில முஃப்தி சுக்கி ஒத்மான் தெரிவித்துள்ளார்.
சமயம், இனம் சார்ந்த பதற்றம் உலகெங்கும் பெருஞ்சவாலாக இருந்துவரும் நிலையில், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முன்வருவதும் கலந்துரையாடுவதும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பு என்று அவர் கூறியிருக்கிறார்.
“பல்வேறு நாடுகளாகவும் இனக்குழுக்களாகவும் மனிதர்களைப் படைத்தது, அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்காகவே தவிர, பகைத்துக் கொள்வதற்காக அன்று எனத் திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த வேற்றுமை என்பது அச்சுறுத்தலன்று; புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பு,” என்று திரு ஒத்மான் ஃபிரீ மலேசியா டுடே ஊடகத்திடம் தெரிவித்தார்.
மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கம், இந்து ஆலயங்கள், இந்து சமய அமைப்புகள் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் புதன்கிழமை (மார்ச் 18) சந்தித்துப் பேசியது தொடர்பில் அவர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மலாய், இந்தியச் சமூகங்களுக்கு இடையே நிலவிவரும் சர்ச்சைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வுகாணும் நோக்கில், அரசு சார்பற்ற அமைப்புகளின் பேராளர்கள் சந்தித்துப் பேசினர்.
‘ஹார்மனி மடானி’ திட்டத்தின்கீழ் புத்ராஜெயாவில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அந்தக் கூட்டத்தில் இருதரப்புக்கும் இடையிலான விரிசல்களைக் களைந்து அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
வெளிப்படையான இந்த உரையாடல் குறித்து மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சைனுல் ரிஜால் அபு பக்கர் கூறுகையில், “அந்நியர்களின் தலையீடு, தூண்டுதல்கள் இன்றி இரு சமூகங்களும் நேரடியாக ஆலோசிக்க இந்த அமர்வு வழிவகை செய்துள்ளது. தற்போதைய பதற்றமான சூழலைத் தணிப்பதே எங்களின் முக்கிய நோக்கம். இது ஒரு தொடக்கம்தான்,” என்றார்.
மலேசிய இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகள் மன்றத்தின் (மஹிமா) தலைவர் என் சிவக்குமார் கூறுகையில், “அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது, சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் கருத்து மோதல்கள் போன்ற பிரச்சினைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளன,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அமைதி, நீதியின் அடையாளமாக வழிபாட்டுத் தலங்கள் இருக்க வேண்டுமே தவிர, அவை மோதல்களுக்குக் காரணமாக அமைந்துவிடக்கூடாது என்று திரு ஒத்மான் வலியுறுத்தி இருக்கிறார்.

