கோட்டையம் / கேரளா: மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக புகழ்பெற்ற சித்தார்த் பிரபு, வியாழக்கிழமை (டிசம்பர் 25) இரவு மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின்போது அவர் காவல்துறையினரை தாக்கியதாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
கோட்டையம் பகுதியில் அவர் ஓட்டிவந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரிமீதும் மோதி அந்தப் பாதசாரி தூக்கி வீசப்பட்டார். அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சித்தார்த்தின் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டனர்.
அவர்கள் சித்தார்த்தைக் கேள்விகேட்டபோது அவர் மது அருந்தியதை அறிந்துகொண்டனர். அங்கு விரைந்துவந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முயன்றபோது அவர்களையும் சித்தார்த் தாக்கியுள்ளார் என்று அறியப்படுகிறது.
படுகாயமடைந்த பாதசாரி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பதற்றமான சூழ்நிலையில் காவல்துறையினர் நடிகர் சித்தார்த் பிரபுவை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நடிகர் சித்தார்த், ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார் எனவும் கூறப்படுகிறது.

