மலேசியா: போலி முதலீட்டுத் திட்டங்கள் மூலம் 1.3 பில்லியன் ரிங்கிட் இழப்பு

2 mins read
a251037a-e2a1-4511-b0df-19468f5f20a5
முதலீட்டு மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்தோரில் 31 முதல் 40 வயதிற்கு உட்பட்டோரே அதிகம் என்று மலேசியக் காவல்துறை தெரிவித்தது. - மாதிரிப்படம்: பிக்சாபே

பெட்டாலிங் ஜெயா: கடந்த 2025 ஜனவரி - நவம்பர் காலகட்டத்தில், இல்லாத முதலீட்டுத் திட்டங்களில் பணத்தைப் போட்டு 9,296 பேர் மோசடிக்கு ஆளானதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தப் போலி முதலீட்டுத் திட்டங்கள் மூலம் 1.37 பில்லியன் ரிங்கிட் (S$435 மில்லியன்) பண இழப்பு ஏற்பட்டது.

பல்வேறு வயதுப் பிரிவினரும் இவ்வகை மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்தனர் என்றும் அவர்களில் 31 முதல் 40 வயதிற்கு உட்பட்டோரே அதிகம் என்றும் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை குறிப்பிட்டது.

இதனையடுத்து, பொதுமக்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட காவல்துறை, மோசடிகளுக்கு இரையாகாமல் தவிர்க்க மோசடித் திட்டங்கள் குறித்து ஆராயுமாறும் வலியுறுத்தியுள்ளது.

முதலீட்டு மோசடிகள் குறித்த பல பொதுவான, முக்கிய அம்சங்களையும் அது குறிப்பிட்டுள்ளது.

“அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை காட்டுவது, குறைவான இடர் அல்லது இடரே இல்லை எனக் கூறுவது, உடனடியாக முதலிடும்படி வற்புறுத்துவது, பதிவுசெய்யப்படாத அல்லது உரிமம் பெறாத நிறுவனங்கள், தெளிவற்ற தகவல்கள், போலி முதலீட்டுத் திட்டங்களைச் சந்தைப்படுத்த செல்வாக்குமிக்கவர்களைப் பயன்படுத்துவது ஆகியவையே அந்த அம்சங்கள்.

2025 முற்பாதியில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டிற்குமேல் கூடியதாகக் கடந்த ஜூலையில் காவல்துறை தெரிவித்திருந்தது.

சென்ற ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மோசடி தொடர்பில் 4,368 வழக்குகள் பதிவாயின. 2024ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 2,715 மோசடி வழக்குகள் பதிவாயின; 750 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பண இழப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்