மலேசியா: ஓய்வுபெறும் ராணுவ வீரர்களின் திறனை மேம்படுத்த 10 மில்லியன் ரிங்கிட்

மலேசியா: ஓய்வுபெறும் ராணுவ வீரர்களின் திறனை மேம்படுத்த 10 மில்லியன் ரிங்கிட்

2 mins read
ca0fe262-6e5c-4130-af21-b765237bd1b3
பணிசார்ந்த கற்றல் திட்டத்தின்மூலம் ஏறத்தாழ 1,300 ஆயுதப்படை வீரர்கள் பயன்பெறுவர் என்று மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நோர்டின் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

செகாமட்: ஓய்வுபெறும் தருவாயில் இருக்கும் மலேசிய ஆயுதப்படை வீரர்களின் திறன்களை மேம்படுத்த அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அவ்வகையில், இவ்வாண்டு தனது ‘பணிசார்ந்த கற்றல்’ திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சு 10 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் ஏறத்தாழ 1,300 பேர் பயனடைவர்.

ராணுவ வீரர்களின் நலன்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காகத் தற்காப்பு அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியே இத்திட்டம் என்று தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படையில் பணியாற்றிய காலத்தில் வீரர்கள் பெற்ற அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும், உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து முறைப்படி மதிப்பீடு செய்து அங்கீகரிப்பதற்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அத்திட்டத்தின்கீழ் வீரர்கள் சமையற்கலை, விருந்தோம்பல், விளையாட்டுப் பயிற்சி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட தங்களின் நிபுணத்துவப் பிரிவுகளில் டிப்ளோமா பட்டங்களைப் பெற முடியும். அதற்கு அவர்கள் தேர்வுகளையும் எழுதத் தேவையில்லை.

“பெரும்பாலான வீரர்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதியுடன் மட்டுமே ராணுவத்தில் சேர்கிறார்கள். அவர்கள் 41 அல்லது 42 வயதில் ஓய்வு பெறும்போது, அதே தகுதியுடன் வேலைச் சந்தையில் நுழைவதால் வேலை வாய்ப்புகளுக்காகப் போட்டியிடுவது அவர்களுக்குக் கடினமாகிறது.

“இந்நிலையில், ‘பணிசார்ந்த கற்றல்’ திட்டத்தின்மூலம் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு பட்டயச் சான்றிதழுடன் பணியிலிருந்து வெளியேறுவர். அதற்காக ஒவ்வொருவர்க்கும் ஆகும் 6,500 ரிங்கிட் மதிப்பீட்டுக் கட்டணத்தை அரசாங்கமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்,” என்று அமைச்சர் முகம்மது காலிட் விளக்கினார்.

செகாமட் முகாமில் உள்ள நான்காவது அரச பீரங்கிப் படைப்பிரிவைப் பார்வையிட்ட பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

மேலும், ஆயுதப்படை வீரர்கள் செயற்கழகத்தால் நடத்தப்படும் இடைநிலைப் பயிற்சித் திட்டத்தைத் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப அமைச்சு மாற்றி அமைத்துள்ளதாகவும் திரு காலிட் தெரிவித்தார்.

ஆறு மாத பயிற்சித் திட்டத்தை முடிக்கும் வீரர்கள், தாங்களாகவே வேலைதேட வேண்டிய அவசியமின்றி, தகுந்த வருமானத்துடன் பொருத்தமான வேலைவாய்ப்புத் துறைகளுக்கு நேரடியாக ஈர்க்கப்படுவதை உறுதிசெய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்