கோலாலம்பூர்: மலேசியாவின் வர்த்தகம் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதே காலகட்டத்தில் வர்த்தகம் 8.7 விழுக்காடு கூடி 2.62 டிரில்லியன் ரிங்கிட்டை எட்டியிருக்கிறது என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சு தெரிவித்தது.
ஏற்றுமதி 4.7 விழுக்காடு உயர்ந்து 1.36 டிரில்லியன் ரிங்கிட்டாகவும் இறக்குமதி 13.3 விழுக்காடு அதிகரித்து 1.25 டிரில்லியன் ரிங்கிட்டாகவும் இருந்தது. இதன் விளைவாக ஏறக்குறைய 117.94 பில்லியன் ரிங்கிட் வர்த்தக உபரி ஏற்பட்டுள்ளது.
“தற்போது நாடு நிர்ணயித்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 2024ஆம் ஆண்டில் வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை முறையே 9.4 விழுக்காடு, 5.6 விழுக்காடு, 13.8 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தப் பாதையில்தான் நாடு நிலை கொண்டுள்ளது,” என்று அமைச்சு மேலும் கூறியது.
2024 நவம்பரில் ஆண்டு அடிப்படையில் வர்த்தகம் தொடர்ந்து 11வது மாதமாக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2.9 விழுக்காடு அதிகரித்து 237.85 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாக 4.1 விழுக்காடு வளர்ச்சி கண்டு 126.57 பில்லியன் ரிங்கிட்டாகவும் இறக்குமதி 1.6 விழுக்காடு உயர்ந்து 111.28 பில்லியன் ரிங்கிட்டாகவும் இருந்தது.
இந்த நிலையில் வர்த்தக உபரி இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது, 26.3 விழுக்காடு மீட்சியடைந்து 15.29 பில்லியன் ரிங்கிட்டுக்கு அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
இதன்படி நவம்பர் மாத வர்த்தக உபரி, அக்டோபர் 2023ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால் 14 மாதங்களில் இல்லாத உயர்வைத் தொட்டுள்ளது.
மேலும் மே 2020 முதல் 55வது மாதமாக வர்த்தக உபரி கிடைத்துள்ளது.
2024 நவம்பர் மாத வலுவான ஏற்றுமதிக்கு முக்கிய துறைகள் உறுதுணையாக இருந்தன. குறிப்பாக உற்பத்தி மற்றும் வேளாண் பொருள்கள், மின்சார மற்றும் மின்னணுப் பொருள்கள், பாமாயில் மற்றும் பாமாயில் சார்ந்த விவசாயப் பொருட்கள், அத்துடன் இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை வலுவான வளர்ச்சிக்கு உதவின என்று அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சாதனை அளவு உயர்ந்துள்ளது. அதுபோல் மின்சார, மின்னணு பொருள்களின் தேவை கூடியதால் தைவானுக்கான ஏற்றுமதியும் அதிகரித்தது.

