ஈப்போ: கலவரத்தைத் தூண்டிவிட முயன்ற சந்தேகத்தின்பேரில் நேப்பாள ஊழியர்கள் 13 பேரை மலேசியக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜோங் பகுதியில், வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இரவு 9.30 மணியளவில் நேர்ந்த வாகன விபத்தில் நேப்பாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் மாண்டுபோனார்.
விபத்தை ஏற்படுத்தியவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டதாக அறியப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தொழிற்சாலை ஊழியர்கள் கிட்டத்தட்ட 1,000 பேர் அவ்விடத்தில் திரண்டு, போக்குவரத்தைத் தடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நிலைமை கைமீறிப் போய்விடாமல் தடுப்பதற்காகக் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னிரவு 2 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் நேப்பாள ஊழியர்கள் அனைவரும் தங்களது தங்குவிடுதிகளுக்குத் திரும்பிவிட்டனர் என்றும் ஹிலிர் பேராக் காவல்துறைத் துணைத் தலைவர் பக்ரி ஸைனல் அபிதின் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நேப்பாள ஊழியர்கள் நான்கு நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, வெளிநாட்டு ஊழியர்கள் பலர் சாலையில் திரண்டு, வன்முறையில் இறங்கி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பான காணொளி ஃபேஸ்புக்கில் பரவியது.