கோலாலம்பூர்: மலேசியாவில் கட்சிக்காரர்களின் நலன்களைக் காப்பாற்ற வேண்டிய வழக்கறிஞர்களே அவர்களை ஏமாற்றி கடந்த நான்காண்டுகளில் 167 பேரிடமிருந்து 160 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 113 ஆடவர்களும் 54 மாதர்களும் 2021ஆம் ஆண்டிலிருந்து ஏமாற்றப்பட்டுள்ளதாக மலேசிய கூட்டரசு வர்த்தகக் குற்றப் பிரிவு இயக்குநர் ராம்லி முகம்மது யூசுஃப் கூறினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நம்பிக்கை மோசடி தொடர்பாக வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட 39 வழக்குகள் இருந்ததாகக் குறிப்பிட்டார். இவற்றால் ஏற்பட்ட மொத்த இழப்பு 56.3 மில்லியன் ரிங்கிட் என்று அவர் சொன்னார்.
இதேபோல் 2022ஆம் ஆண்டு 11.7 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படுத்திய 30 வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 29.7 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படுத்திய 35 வழக்குகள் பதிவானதாகவும் அவர் விளக்கினார். மேலும், சென்ற ஆண்டு (2024) மட்டும் 62 வழக்குகள் பதிவாகி அவற்றால் நேர்ந்த இழப்பு 62.8 மில்லியன் ரிங்கிட் என்றும் திரு ராம்லி முகம்மது யூசுஃப் த ஸ்டார் செய்தித்தாளிடம் கூறினார்.
“இவ்வாண்டு ஜனவரி 15ஆம் தேதி, புதிய வழக்கு ஒன்றில் 92,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், 2021ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 53 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
“இவற்றில் ஏமாற்றப்பட்டவர்கள் பல்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக உள்ளனர். இந்தப் பிரிவில் 42 பேர் உள்ளனர். இதைத் தொடர்ந்து 41லிருந்து 50 வயதுப் பிரிவினரில் 39 பேர், 31லிருந்து 40 வயதுப் பிரிவினரில் 35 பேர், 51லிருந்து 60 வயதுப் பிரிவினரில் 34 பேர், 21லிருந்து 30 வயதுப் பிரிவினரில் 16 என இவர்களுடன் 15லிருந்து 20 வயதுப் பிரிவில் ஒரு நபரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்,” என அவர் பட்டியலிட்டார்.


