மலேசியா: 200,000 அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர்

மலேசியா: 200,000 அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர்

2 mins read
d84db143-7818-4beb-95ff-52f1d0a0da6b
தங்கள் வீட்டிலிருந்து எட்டுக் கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள அலுவலகங்களில் வேலைசெய்யும் அரசு ஊழியர்கள் வாரம் மூன்று நாள்கள் வீட்டிலிருந்து வேலைசெய்ய அனுமதிக்கப்படுவர் என்று ஏப்ரல் 2ஆம் தேதி மலேசிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. - மாதிரிப்படம்: ஃபிரீ மலேசியா டுடே

ஷா ஆலம்: மலேசியாவில் 200,000க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் புதன்கிழமை (ஏப்ரல் 15) முதல் வீட்டிலிருந்து வேலை செய்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி நிபந்தனைகளின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டும் இந்தக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்தார்.

“அரசு ஊழியர்கள் அனைவருமே வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாது. அது பல காரணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.

“வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனுமதிப்பது அந்தந்தத் துறைத் தலைவர்களைச் சார்ந்தது,” என்று திரு ஷம்சுல் அஸ்ரி கூறினார்.

ஷா ஆலம் எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் நடந்த பொதுச் சேவை புத்தாக்கத் திட்டம் 2026 நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்கள் வீட்டிலிருந்து எட்டுக் கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள அலுவலகங்களில் வேலைசெய்யும் அரசு ஊழியர்கள் வாரம் மூன்று நாள்கள் வீட்டிலிருந்து வேலைசெய்ய அனுமதிக்கப்படுவர் என்று ஏப்ரல் 2ஆம் தேதி அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இந்த நடைமுறை ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மத்திய கிழக்குச் சண்டை காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் வழிமுறைகளில் ஒன்றாக அரசாங்க ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் நடவடிக்கையை மலேசிய அரசு எடுத்துள்ளது.

அனைத்துலகப் பதற்றங்களிலிருந்து, குறிப்பாக தற்போது நிலவும் புவிசார் அரசியல் பதற்ற நிலைகளிலிருந்து மலேசியா விடுபட முடியாது என்று திரு ஷம்சுல் அஸ்ரி குறிப்பிட்டார்.

இந்நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் அரசாங்க ஊழியர்கள் பொறுப்புடன் கடமையாற்றுவர் என்றும் இந்த நீக்குப்போக்கை அவர்கள் முறையின்றிப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், இதைக் காரணமாகக் காட்டி முன்னரே திட்டமிடப்பட்ட எந்தத் திட்டங்களையும் தாமதப்படுத்தவோ தள்ளிப்போடவோ கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்