கோலாலம்பூர்: கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான மலேசிய அரசாங்கம் வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டத்தை அமைச்சகங்கள், அமைப்புகள், முகவைகள் போன்ற பல இடங்களில் அமல்படுத்த ஒப்புதல் அளித்தது.
ஏப்ரல் 15ஆம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து 155,000 அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற விண்ணப்பித்தனர்.
அத்திட்டத்தின் பயனால் 334,000 லிட்டர் எரிபொருள் சேமிக்கப்பட்டதாக மலேசிய அரசாங்கம் புதன்கிழமை (ஏப்ரல் 22) தெரிவித்தது.
சேமிக்கப்பட்ட எரிபொருளின் மதிப்பு S$218,200 (RM678,000 ரிங்கிட்) என்ற தொகைக்கும் அதிகமாக இருக்கலாம் என்று அரசாங்கம் கணித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.
அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் புதன்கிழமை நடந்த அரசாங்கச் சந்திப்புக் கூட்டத்தில் சேமிப்பு பற்றிய விவரங்களை வழங்கினார் எனவும் திரு ஃபாஹ்மி கூறினார்.
தனியார் துறையின் விவரங்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை
அரசாங்க அமைப்புகள் தவிர்த்து தனியார் துறையில் எத்தனை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுகின்றனர் என்ற விவரங்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை என்ற அவர், அதையும் சேர்த்தபிறகே மொத்த சேமிப்பு விவரம் கண்டறியப்படும் என்றும் தெரிவித்தார்.
இருவாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதுபற்றி கருத்துரைத்தார்.

