மலேசியா: ஒரே மாதத்தில் 36,141 புதிய வாக்காளர்கள்

மலேசியா: ஒரே மாதத்தில் 36,141 புதிய வாக்காளர்கள்

1 mins read
42e1a13c-ed74-49a8-837b-164d59ba91bb
பிப்ரவரி மாதத்திற்கான துணைநிலை வாக்காளர் பட்டியலை மார்ச் 18 முதல் ஏப்ரல் 16 வரை 30 நாள்களுக்குள் பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ளலாம் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: தி வைப்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 18 வயதை எட்டிய 36,141 பேர், அம்மாதத்திற்கான துணைநிலை வாக்காளர் பட்டியலின்கீழ் புதிய வாக்காளர்களாகத் தானாகவே சேர்க்கப்பட்டுவிட்டனர்.

“மார்ச் 17ஆம் தேதி சரிபார்க்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்ட துணைநிலை வாக்காளர் பட்டியலில், தொகுதி மாறிய 14,129 வாக்காளர்களும், வாக்காளர் பிரிவு அல்லது தகுதிநிலையை மாற்றிக்கொண்ட 2,322 பேரும் அடங்குவர்,” என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கைருல் ஷாரில் இத்ரஸ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திற்கான துணைநிலை வாக்காளர் பட்டியலை மார்ச் 18 முதல் ஏப்ரல் 16 வரை 30 நாள்களுக்குள் பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 18 வயதை எட்டியவர்களும் தொகுதி, வாக்காளர் பிரிவு, தகுதிநிலை மாற்றம் தொடர்பில் விண்ணப்பம் செய்தவர்களும் தங்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், https://myspr.spr.gov.my என்ற இணையத்தளத்தில் உள்ள இணையவழி விண்ணப்பத்தில் படிவம் ‘சி’யை நிரப்பி (Form C) தங்களது பெயரைச் சேர்க்கும்படி கோரலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத் தேர்தல் அலுவலகங்களுக்கு நேரில் சென்று முறையிடலாம் என்று திரு கைருல் அறிவுறுத்தி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்