பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் டென்வி-3 என்ற உருமாறிய டெங்கிக் கிருமி பரவலாகக் காணப்படுவதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு, ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து ஜூன் 27ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலம்வரை 38,842 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ‘ஐடெங்கி’ இணையத்தளம் குறிப்பிட்டது.
ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி ஒவ்வொரு நாளும் டெங்கிக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 310ஆகப் பதிவானது.
சிலாங்கூர் மாநிலத்தில்தான் ஆக அதிகமான டெங்கித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அங்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,701. அதையடுத்து கோலாலம்பூரில் 7,191 பேரும் ஜோகூரில் 4,591 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு, ஆக அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவான ஆசியான் நாடுகளில் மலேசியா, மூன்றாம் இடத்தில் இருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்தார்.
டென்வி-3 கிருமித்தொற்றே மலேசியாவில் ஆக அதிகமாகப் பரவிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் டெங்கி தடுப்புப் பரிந்துரை அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் சம்ப்ரி செகாவி, டென்வி-3 கிருமித்தொற்று புதிய கிருமிவகை அல்ல என்றார். பிற டெங்கி கிருமித்தொற்றுகளைப் போலத்தான் டென்வி-3 கிருமித்தொற்றும் உள்ளது என்றார் அவர்.
“பாதிக்கப்பட்டோரிடம் கடுமையான காய்ச்சல், தலைவலி, கண்ணுக்குப் பின் வலி, தசை, மூட்டு வலிகள், வாந்தி, மயக்கம், தோலில் தடிப்புகள், சோர்வு ஆகியவை தென்படலாம். தொடர்ச்சியான வாந்தி, கடுமையான வயிற்று வலி, ரத்தக் கசிவு, சோர்வு, மூச்சுத் திணறல் போன்றவை குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்,” என்றார் பேராசிரியர் டாட்கர் சாம்ப்ரி.
தொடக்கத்திலேயே அறிகுறிகள் மூலம் டெங்கித் தொற்றைக் கண்டறிந்து துரிதமாக மருத்துவப் பராமரிப்பை நாடும்படி அவர் அறிவுறுத்தினார்.
மேலும், ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து டெங்கித் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களிடம் தீவிரமாக அறிவுறுத்தவேண்டும் என்றும் டாக்டர் சம்ப்ரி குறிப்பிட்டார்.


