கோலாலம்பூர்: மலேசியாவில் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் 2024ஆம் ஆண்டிறுதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 476 கொலைகள் பதிவாகின. இந்தத் தகவலை அரச மலேசியக் காவல்துறை வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் 261 கொலைகள் பதிவானதைக் காவல்துறைத் தரவுகள் காட்டுவதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்தது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை 215 கொலைக் குற்றங்கள் பதிவாகின.
இந்த இரண்டு ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமான கொலைகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் 115 கொலைக் குற்றங்கள் பதிவாகின.
அதற்கு அடுத்தபடியாக பேராக் (60), ஜோகூர் (59), சாபா (47), சரவாக் (36) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில் அதிக கொலைகள் பதிவாகியதற்கு அதன் பரப்பளவும் மக்கள்தொகையும் முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, சிலாங்கூரில் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் இருப்பதும் இதற்குக் காரணம் என்று மலேசியாவின் குற்றவியல் புலனாய்வுத் துறை கூறியது.
2023ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் 266 பேர் கொலையுண்டனர்.
அவர்களில் 212 ஆண்களும் 54 பெண்களும் அடங்குவர். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கொலையுண்ட 226 பேரில் 87 பேர் வெளிநாட்டினர்.