பெட்டாலிங் ஜெயா: இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மலேசியக் காவல்துறையினர் 59 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்காகத் தங்களது வேலைகளை இழந்தனர்.
மற்றவர்கள் ஒழுங்குமுறை விதிமீறல், குற்றவியல் நடவடிக்கைகள், ஊழல், ஷரியா சட்டம் சார்ந்த ஒழுக்கக்கேடு போன்ற காரணங்களுக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று மலேசியக் காவல்துறையின் நன்னடத்தை, இணக்கப் பிரிவு இயக்குநர் அஸ்ரி அகமது தெரிவித்தார்.
2025க்குமுன் செய்த குற்றங்கள் அல்லது இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அந்தப் புள்ளிவிவரம் உள்ளடக்கும் என்று பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.
இவ்வாண்டு ஜனவரி-மே காலகட்டத்தில் மேலும் 146 காவல்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். அதே காலகட்டத்தில் காவல்துறையினரின் ஒழுக்கக்கேடு குறித்து அத்துறைக்கு 2,637 புகார்கள் வந்தன.
“மக்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தவறிழைக்கும் ஓர் அதிகாரிமீது எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உறுதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்குக் காவல்துறை உறுதியளிக்கிறது,” என்று திரு அஸ்ரி தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் ஒழுங்கீன நடத்தை குறித்து புகார் அளிப்பதற்காக ஜூன் 4ஆம் தேதி ‘அடுவான் ஜிப்ஸ்’ எனும் கைப்பேசிச் செயலியை மலேசியக் காவல்துறை அறிமுகப்படுத்தியது. அதன் வழியாக இதுவரை 20க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகத் திரு அஸ்ரி கூறினார். புகார் அளிப்போரின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.