கோலாலம்பூர்: மலேசியாவில் இவ்வாண்டு மே மாத இறுதி நிலவரப்படி, மின்வாகனங்களுக்காக நாடு முழுதும் கிட்டத்தட்ட 6,400 பொது மின்னூட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 2,143 நேரடி மின்னோட்டத்தின் மூலம் வேகமாக மின்னாற்றலை ஏற்றக்கூடியவை. மின்னூட்டிகள். எஞ்சிய 4,273 மாற்றுதிசை மின்னோட்டத்தின் மூலம் செயல்படுபவை.
அந்நாட்டின் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சு அதனைத் தெரிவித்தது.
நாடு தழுவிய நிலையில் மின்வாகன உள்கட்டமைப்புக்கான பற்றாக்குறை நிலவுகிறது. மின்னூட்ட வசதிகளை நிறுவும் பணிகளை விரைவுபடுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சு கூறியது.
மின்வாகன மின்னூட்டக் கூடங்களுக்கான திட்ட வழிகாட்டி நெறிமுறைகளும் அவற்றில் அடங்கும் என்று அது தெரிவித்தது. புதிய மின்னூட்டக் கூடங்களுக்கான ஒப்புதல் நடைமுறையை 14 நாள்களாகக் குறைக்க அவை உதவுகின்றன.
“தேசிய மின்வாகனப் பணிக்குழுவின் மூலம் மின்வாகன உள்கட்டமைப்பு மேம்பாடு உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது, உள்ளூர் நிறுவனங்கள், வாகன உற்பத்தியாளர்கள், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையில் உத்திபூர்வ ஒத்துழைப்பின் மூலம் வர்த்தக நடைமுறைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது,” என்று அமைச்சு குறிப்பிட்டது. நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சு புதன்கிழமை (ஜூலை 8) எழுத்துபூர்வமாகப் பதில் தந்தது.
உள்நாட்டு மின்வாகனப் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் ஒட்டுமொத்த மின்வாகன உள்கட்டமைப்புத் தயார்நிலை, சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும் அரசாங்கம் வைத்துள்ள திட்டங்கள் குறித்துக் கோலா பிலா நாடாளுமன்ற உறுப்பினர் அட்னான் அபு ஹாசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.

