கோலாலம்பூர்: மலேசியாவில் எச்எம்பிவி எனப்படும் ‘மனித மெடாநியூமோவைரஸ்’ தொற்றுச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு 327 எச்எம்பிவி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இது, 2023ஆம் ஆண்டில் பதிவான 225 தொற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும்.
“எச்எம்பிவி சுவாசக் குழாய் தொற்றுப் பிரச்சினை, ‘நியூமோவைரஸ்’ குடும்பத்தைச் சேர்ந்த கிருமியால் ஏற்படுகிறது. இது புதிய நோய் அல்ல,” என்று ஜனவரி 4ஆம் தேதி சுகாதார அமைச்சு தெரிவித்தது.
எச்எம்பிவி பாதிப்பு உள்ளவர்களுக்கு சாதாரண சளிக்காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆனால் மிகவும் கடுமையான சூழலில் சாதாரண அறிகுறிகள் மூச்சுக்குழாய் அழற்சியாகவோ நிமோனியாவாகவோ மாறலாம். சமூகத்தில் இத்தகைய சுவாசக்குழாய் தொற்று தொடர்ந்து இருக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டது.
இருமல் மற்றும் தும்மலின்போது கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், இருமல், தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று அது மேலும் கூறியது.
பொதுமக்கள் தங்களுடைய ஆரோக்கியத்தை முன்கூட்டியே கவனித்துக்கொள்ளவும், மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மூடப்பட்ட இடத்தில் அல்லது நெரிசலான பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சு, கிருமித் தொற்று ஆபத்து உள்ள நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியது.
ஆண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் சுவாசக்குழாய் நோய்த்தொற்று அதிகரிப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. சீனா போன்ற குளிர்காலம் கொண்ட நாடுகளிலும் இந்தத் தொற்று அதிகமாக பதிவாகும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சீனாவின் வடக்கு மாகாணங்களில் அண்மையில் 14 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்எம்பிவி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
அதிகாரபூர்வ அறிக்கையின்படி, 2024 டிசம்பர் 16 முதல் 22 வரையிலான வாரத்தில் சீனாவில் கடுமையான சுவாச நோய் தொற்றுகள் அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.