தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026 நடுப்பகுதிக்குள் மின்சிகரெட்டிற்குத் தடை விதிக்க மலேசியா இலக்கு

1 mins read
7673541b-31be-41b9-b98b-5508a72d2ef1
மின்சிகரெட்டிற்கு எப்போதுமுதல் தடை விதிக்கப்படும் என்பது அமைச்சரவையின் இறுதி முடிவைப் பொறுத்தது என்றும் ஆயினும் 2026 நடுப்பகுதியில் அதனை அமல்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சு தொடர்ந்து செயல்படும் என்றும் மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: வரும் 2026ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் மின்சிகரெட்டிற்குத் தடைவிதிப்பதற்கான இலக்கில் மலேசிய சுகாதார அமைச்சு உறுதியாக இருக்கிறது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்பில் அமைச்சு படிப்படியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“படிப்படியான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறோம். மின்சிகரெட்டிற்குத் தடைவிதிப்பதுதான் இறுதி இலக்கு. ஆயினும், அமைச்சரவையின் முடிவை முன்கூட்டியே தெரிவிக்க இயலாது,” என்று வியாழக்கிழமை (செப்டம்பர் 25) செய்தியாளர்களிடம் டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார்.

மின்சிகரெட் பொருள்கள் தொடர்பில் வல்லுநர் குழு ஒன்று தனது பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அவ்விவகாரம் குறித்து வல்லுநர் குழு விரிவாக ஆராய்ந்துள்ளது. அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது அனைத்துப் பரிந்துரைகளையும் முன்வைப்போம்,” என்றும் அவர் சொன்னார்.

முன்னதாக, மின்சிகரெட்டிற்குத் தடை விதிப்பது தொடர்பில் அமைச்சரவை அறிக்கை ஒன்றைச் சுகாதார அமைச்சு இறுதிசெய்து வருவதாக இம்மாதம் 11ஆம் தேதி டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்திருந்தார். ஆயினும், அமைச்சரவை நிலையில் ஆலோசனை செய்யாத வரை அதுபற்றிய விவரங்களை வெளியிட முடியாது என அப்போது அவர் கூறியிருந்தார்.

மின்சிகரெட்டிற்கு எப்போது தடை விதிக்கப்படும் என்பது அமைச்சரவையின் இறுதி முடிவைப் பொறுத்தது என்ற அவர், ஆயினும் 2026 நடுப்பகுதியில் அதனை அமல்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சு தொடர்ந்து செயல்படும் என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்